Naan Muthvan Project: College Dream Program to guide Perambalur district government school students will be held on May 9; Collector Info!

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி பயில உள்ள மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியாக ”கல்லூரிக் கனவு” என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அதற்கான நடத்தப்படுதவற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:

12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் வரும் மே.6 அன்று வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து, அரசுப் பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்காக என்ன படிக்கலாம் என்பது குறித்த புரிதலை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் கல்லூரிக்கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வு மே.9 அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு உயர்கல்வியில் என்னென்ன படிக்கலாம், கலை அறிவியலில் என்ன படிப்புகள் உள்ளது, பொறியியலில் என்ன படிப்புகள் உள்ளது, அறிவியல் தொழில்நுட்பங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளது என்பன போன்ற விரிவாக தகவல்களை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளார்கள்.

பல்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்த காட்சி அரங்குகள் அமைக்க உள்ளார்கள். கல்விக்கடனுதவி பெறுவதற்கான வங்கியாளர்களின் அரங்குகள், உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வீடியோ காட்சிகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படவுள்ளது.

உயர்கல்வியில் சாதித்த மாணவ மாணவிகள் தாங்கள் கடந்து வந்த பாதைகள் குறித்து கல்லூரிகளில் பயில உள்ள மாணவ மாணவிகளுக்கு விளக்க உள்ளார்கள். கல்லூரி கனவு குறித்து அரசால் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை இந்நிகழ்விற்கு வருகை தரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்க உள்ளார்கள்.

இந்த சிறப்புமிகு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துவருதல், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உறுதி செய்திட வேண்டும்.

அனைத்துத்துறை அலுவலர்களும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திட ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும், என கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும், கல்வித்துறை பணியாளர்கள், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!