Namakkal collector in the region, including the review of ration shops paramathi velur
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புஞ்சை இடையார் மேல்முகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் இடையார் மேல்முகம் ரேஷன் கடையை பார்வையிட்ட ஆட்சியர் பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் அரசினால் வழங்கப்பட்டுள்ள பாயிண்ட் சேல்ஸ் மிசின் இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார்.
இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து, பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார். மேலும் பல்வேறு ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் குடிமைப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா, விற்பனையாளர் சரியாக வருகின்றாரா என்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களை ஸ்மார் கார்டு அட்டைதாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும் முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், ரேஷன்கடை மற்றும் சுற்றுப்புறத்தை தற்போது உள்ளது போன்று எப்போதும் தூய்மையாக பராமரிக்குமாறும் விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் பர்ஹத் பேகம், பரமத்திவேலூர் சிவில் சப்ளை தாசில்தார் கலைவாணி உள்ளிட்ட வழங்கல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.