Namakkal collector’s office demanding the demonstration before, by Tasmac Shop Staff
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளஞ்செழியன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி சுரேஷ்பாபு, மாவட்டச் செயலர்கள் முருகேசன், சண்முகம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இதில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி விதிகள் உருவாக்கப்பட வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடையாக குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு, பணிவிதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மாதாந்திரப் போக்குவரத்து பயணப்படியை அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் ரூ.1,000 என உயர்த்தி வழங்க வேண்டும். கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்து மன உளைச்சல், எதிர்கால வாழ்க்கை குறித்த காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்கள், இறந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசுப்பணியும், இழப்பீடு தொகையும் வழங்கவேண்டும்.
டாஸ்மாக் பணியாளர்களின் 30 அம்சக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், பிரசாரச் செயலாளர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.