Namakkal district police record in state sports tournaments: District SP Appreciation
மாநில் அளவிலான தடகளை விளையாட்டுப் போட்டிகளில் நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட எஸ்.பி அருளரசு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு காவல் துறை சார்பில் 58-வது மண்டலங்களுக்குகிடையேயான மாநில அளவிலான தடகள போட்டி திருவள்ளுவர் மாவட்டம், வண்டலூர், மேலகோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழக அரங்கில் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழக அளவில் மல்யுத்தப் போட்டியில் இரண்டாவதாகவும், ஜூடோவில் இரண்டாவதாகவும், கராத்தேவில் இரண்டாவதாகவும் மேற்கு மண்டல காவல் துறையினர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் மேற்கு மண்டலம் சார்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் ஏட்டு அமுதா, 75 கிலோ எடை பிரிவு, ஜூடோ மற்றும் குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.
ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அருள்மொழி என்பவர் 63 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கமும், ஜூடோ போட்டியில் வெள்ளிப் பதக்கமும் மற்றும் டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
ஜேடர்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் மகேஷ் என்பவர் 55 கிலோ எடைப்பிரிவுக்கான ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
நாமக்கல் ஆயுப்படை பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் தினேஷ்குமார் என்பவர் 65 கிலோ எடைப்பிரிவுக்கான ஊசு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
நாமக்கல் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் என்பவர் 65 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்தப் பிரிவில் வெண்கலப் பதக்கம் மற்றும் டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
நாமக்கல் ஆயுப்படை பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் ரவி என்பவர் 75 கிலோ எடைப்பிரிவு குழுவினருக்கான கராத்தே போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இந்த நாமக்கல் மாவட்ட போலீசார் மாநில அளவில் மூன்றாம் இடமும், மண்டல அளவில் முதலிடத்திற்கான 3 கேடயங்களை பரிசாக பெற்றுள்ளனர்.
மேலும் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அகில இந்திய காவல்துறை சார்பில் வருகிற 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஜூடோ போட்டிக்கு பெண் போலீஸ் அமுதாவும், ஊசு போட்டிக்கு போலீஸ்காரர் தினேஷ்குமாரும் தேர்வு பெற்றுள்ளனர். பரிசு மற்றும் பதக்கங்கள் பெற்ற போலீஸ்காரர்களுக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி அருளரசு பாராட்டு தெரிவித்தார்.