Namakkal Eastern District Congress protest against the Petrol, diesel prices increase
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் பார்க் ரோட்டில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரப்பன், பாண்டியன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்து பேசியதாவது:
கர்நாடகா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. நாடு முழுவதும் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலை தமிழகத்தில் ரூ.80 மேல் தாண்டியுள்ளது. 2013க்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டது.
நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே வருவதால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதன் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். டீசல் விலை உயர்வினால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வரியால் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. டீசல் மீதான மத்திய அரசின் வரி மூன்று மடங்கும், பெட்ரோல் மீதான விலை இரண்டு மடங்கும் அதிகரித்துள்ளது.
2013ம் ஆண்டை ஒப்பிட்டால் 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மத்திய அரசு விதிக்கும் வரி மிக அதிகம்.பெட்ரோல், டீசலையும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர் சாந்திமணி,மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம், வட்டார தலைவர்கள் குப்புசாமி, பரமன், இளங்கோ, நகரத் துணைத் தலைவர் குமார், ராசிபுரம் நகர தலைவர் முரளி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் நகர செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.