Namakkal, Sri Ranganathar temple Vaikunda Ekadasi festival to begin work on 55 thousand Laddu
நாமக்கல் ஸ்ரீ ரங்ககநாதர் கோவில் வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க 55 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் அமைந்துள்ள மலையைக் கடைந்து ஸ்ரீ ரங்கநாதர் குடவறைக் கோயிலில் அமைந்துள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அரங்கநாதர் அனந்த சயன நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு வரும் 18ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்ய பூஜை நடைபெற்று, வைகானச ஆகம முறைப்படி பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் காலை 4மணிக்கு திறக்கப்படவுள்ளது.
விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக உபயதாரர்கள் மூலம் 55 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான லட்டுகள் தயாரிக்கும் பணி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள மண்டபத்தில் நேற்று துவங்கப்பட்டது.
மணிக்கட்டிப்புதூர் நடேசன், ஜெயமணி தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் லட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 55 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க கடலை மாவு 800 கிலோ, சர்க்கரை ஆயிரத்து 600 கிலோ, நெய் 13 டின், ரீபைன்ட் ஆயில் 40 டின், உலர்திராட்சை 30 கிலோ, முந்திரி 50 கிலோ, டைமன்ட் கற்கண்டு 25 கிலோ, லவங்கம் 2 கிலோவும் பயன்படுத்தப்படுகிறது.
வரும் 18ம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீ ரங்கநாதர் கோயில் இரவு 10 மணி அளவில் சொர்க்கவாசல் நடை சாத்தப்படும். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.