National Voter Day: Awareness Art and Literature Contest for College Students.
பெரம்பலூர்: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேசிய வாக்காளர் தினத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் வாக்காளர் தினம் குறித்தும், தகுதியுடைய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களிடையேயான விழிப்புணர்வு போட்டிகளை இன்று தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் தொடங்கி வைத்தார்.
அதன்படி இன்று நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் கோலப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டிகளை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ரோவர் கல்வி நிறுவனங்கள், தனலெட்சுமி கல்வி நிறுவனங்கள், சாரதாதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி 25-ந்தேதி நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியரால் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், சிவா (தேர்தல் பிரிவு) பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியின் உதவி பேராசிரியர் சந்திரமௌலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.