Near Perambalur Rs. 4.42 crore project work was inaugurated by Minister Sivasankar.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு கலெக்டர் கற்பகம் தலைமையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நன்னை அரசு உயர்நிலைப் பள்ளியில் பேராசிரியர் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் 6 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகம் கட்டும் பணியினையும், ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணியினையும், வடக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாரியம்மன் கோவில் அருகில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியினையும், வடக்கலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கழிவறை அமைக்கும் பணியினையும், வடக்கலூர் காமராஜர் நகர் ஆதிதிராவிடர் மேற்கு தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பழைய அரசமங்கலம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 5.14 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
பின்பு கிழுமத்தூர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.02 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் சாலை அமைக்கும் பணியினையும், கீழப்புலியூர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் கீழப்புலியூர் முதல் பீல்வாடி சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மிளகாநத்தம் கிராமத்தில் பெரம்பலூர் முதல் வாலிகண்டபுரம் வரை செல்லும் பேருந்தினை தினசரி 4 நடைகள் மிளகாநத்தம் வழியாக வழித்தட நீட்டிப்பு சேவையினையும், எறையூர் சர்க்கரை ஆலை முதல் காருகுடி, மழவராயநல்லூருக்கு தினசரி 1 நடை வழித்தடமாற்றம் செய்து இயக்கப்படவுள்ள நகரப்பேருந்தினையும் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார்.
முன்னதாக கூட்டுறவுத் துறையின் சார்பில், பழைய அரசமங்கலம் கிராமத்தில் அக்ரஹாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து மாதந்தோறும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பழைய அரசமங்கலம் கிராமத்திற்கு குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில் நகரும் நியாய விலைக்கடையினை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்கள்.
வேப்பூர் ஊராட்சி யூனியன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாநிதி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அழகு.நீலமேகம், பட்டுச்செல்வி ராஜேந்திரன், குன்னம் வட்டாட்சியர் அனிதா உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.