New Corona Affects Children: Accelerate Vaccine Testing! PMK Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சிங்கப்பூரில் புதிதாக பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த வைரஸ் இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கப்பட்டன. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அடுத்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 18 வயது நிறைவடைந்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மே ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் கூட, அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் கூட நாளை மறுநாள் முதல் தான் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. ஆனால், அதற்குள்ளாக 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரசால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேகமாக பரவி வரும் B.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா கடந்த சில மாதங்களுக்கு முன்பே முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்நாள் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் சிங்கப்பூரில் மொத்தம் 333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் 16 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஆவர். சிங்கப்பூருக்கு அருகில் உள்ள தைவான் தலைநகர் தைபே-யிலும் இதே வைரஸ் பரவி குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியியுள்ளது. அதனால் இரு நகரங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சிங்கப்பூரில் குழந்தைகளைத் தாக்கி வரும் B.1.617 வகை கொரோனா உருமாறிய வைரஸ் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது என்பது தான். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த B.1.1.7 வகையிலிருந்து இது உருமாறியதாக தெரிகிறது. இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்து, மராட்டிய மாநிலத்தின் சில பகுதிகளில் B.1.617 வகை கொரோனா இன்னும் இருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகளைத் தாக்கும் புதிய வகை கொரோனா வேகமாக பரவும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு குழந்தைகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்.
புதிய வகை கொரோனா தாக்குதலில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக இரண்டு கட்டங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். முதற்கட்டமாக சிங்கப்பூரிலிருந்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், இந்தியாவின் பிற நகரங்களுக்கும் விமான போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னைக்கும், தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளை சோதனைகளுக்கு உள்ளாக்கி குறைந்தபட்சம் இரு வாரம் தனிமைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அடுத்தக்கட்டமாக, குழந்தைகளுக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். சிங்கப்பூர் குழந்தைகளைக் காக்க 16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாக அந்நாட்டின் மருத்துவத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்கா இன்னும் ஒருபடி மேலே போய், 12 வயது நிரம்பியவர்களுக்கான ஃபைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. உலகிலேயே 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள் அதிகமுள்ள இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக போட வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தக் கூடிய கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் முதற்கட்ட ஆய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 2 மற்றும் 3-ஆம் கட்ட ஆய்வுகளுக்கு மத்திய அரசு நேற்று முன்நாள் அனுமதி அளித்துள்ளது. கால சூழலுக்கும், உலக சுகாதார நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்கும் ஏற்ற வகையில் இந்த தடுப்பூசி ஆய்வுகளை விரைவாக முடித்து, அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ் & டி தடுப்பூசியை அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அந்த நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கோவேக்சின் தடுப்பூசி ஆய்வுகளை விரைவுபடுத்தவும், மற்ற இரு தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இந்தியக் குழந்தைகளை கொரோனாவிலிருந்து அரசு பாதுகாக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.