NGT, Order to open Sterlite plant: Corporate domination Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை:

தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லாது; அடுத்த 3 வாரங்களுக்குள் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் அமைப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் அளித்தத் தீர்ப்பு எவ்வகையிலும் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. ஏனெனில் இந்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக ஆட்சியாளர்கள் உளப்பூர்வமாக நினைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே 22&ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணி நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சியாளர்கள், அதனால் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை போக்குவதற்காகவே ஆலையை மூடுவதாக நாடகம் நடத்தினார்கள். உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை என்பது, கால்பந்து போட்டிகளில் எதிரணிக்கு ஆதரவாக போடப்படும் ‘செல்ஃப் கோலுக்கு’ இணையான நடவடிக்கை ஆகும். ஆலையை மூடுவது போன்று நாங்கள் அரசாணை பிறப்பிக்கிறோம்; நீங்கள் நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என ஆலை நிர்வாகத்துடன் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டு தான் அரசு ஆணை பிறப்பித்தது.

எதிர்பார்த்தபடியே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து ஆலையைத் திறக்க அனுமதி பெற்றுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை கடந்த மே 29&ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்த போதே அது நீதிமன்ற பரிசீலனையில் நிற்காது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினேன். ‘‘ஓர் ஆலையை மூடுவது எளிதான ஒன்றல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது ஸ்பீக்கிங் ஆர்டருக்கு இணையாக விரிவான காரணங்களைப் பட்டியலிட்டிருக்க வேண்டும். ஒரு பத்தியில் அரசாணை பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது.

ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை. இதைக் காரணம் காட்டியே ஆலையை மூடியிருக்கலாம்’’ என்று கூறியிருந்தேன். ஆனால், அதை மதிக்காத ஆட்சியாளர்கள், அரசாணையே போதுமானது என்றும், உலக நீதிமன்றத்துக்கு சென்றால் கூட ஆலையை திறக்க முடியாது என்றும் எகத்தாளம் பேசினார்கள்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்கு விசாரணையை வலிமையாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தொடக்கம் முதலே தீர்ப்பாயத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இருந்தன. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போது, அதற்கு ஆலை நிர்வாகம் கடுமையாக எதிர்த்தது. அதை பசுமைத் தீர்ப்பாயம் பொருட்படுத்தியிருக்கக் கூடாது. ஆனால், தீர்ப்பாயமோ பஞ்சாப் நீதிபதி ஒருவரை நியமிக்க முயன்று அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலை நியமித்தது.

பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட தருண் அகர்வால் குழு தொடக்கத்திலிருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டார். ஆலையை திறக்கும்படி பரிந்துரைக்க வல்லுனர் குழுவுக்கு அதிகாரம் இல்லை எனும் போதிலும், ஆலையைத் திறக்க அக்குழு பரிந்துரைத்தது. அதையும் பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டு ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை போக்க ரூ.100 கோடி செலவு செய்வதாக ஸ்டெர்லைட் ஆலை கூறியதை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், அடுத்த 3 ஆண்டுகளில் அத்தொகையை செலவிட அனுமதி அளித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மனித உயிர்களை தீர்ப்பாயங்கள் எவ்வளவு மலிவாகப் பார்க்கின்றன என்பதற்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தான் உதாரணமாகும்.

மொத்தத்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் வென்றிருக்கிறது; தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. இதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மட்டும் பயன் ஏற்படாது. மாறாக, தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது அவசர சட்டம் பிறப்பித்தோ அல்லது சட்டப்பேரவையைக் கூட்டி சட்டம் இயற்றியோ அதனடிப்படையில் இந்த வழக்கை எதிர்கொள்வது தான் சரியாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!