Special classes for students who face NIT, IIT, and NEET Entrance exam
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களில் 12 ஆம் வகுப்பில் 30 மாணவ-, மாணவிகளையும், 11 ஆம் வகுப்பில் 30 மாணவ, – மாணவிகளையும் தேர்வு செய்து சூப்பர் 30 என்ற பெயரில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்து பயிற்சி அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனமும் (என்.ஐ.டி) இணைந்து பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வகுப்பு மாணவ, மாணவர்களுக்காக என்.ஐ.டி, ஐ.ஐ.டி மற்றும் என்.இ.இ.டி பொது நுழைவுத்தேர்வுகளை எதிர் கொள்ள சிறப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் நந்தகுமார் முன்னிலையில் திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் (என்.ஐ.டி) இயக்குநர் கண்ணபிரான்,அசோசியேட் டீன் வெங்கட கிருத்திகா ஆகியோர் இன்று அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து சூப்பர் 30 சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டுள்ள மாணவ,மாணவியர்களிடம் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை கலந்துரையாடினார்கள்.
குறிப்பாக என்.ஐ.டி, ஐ.ஐ.டி மற்றும் என்.இ.இ.டி பொது நுழைவுத்தேர்வுகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற என்.ஐ.டி மாணவ,மாணவியர்கள் எவ்வாறு தேர்வை எதிர் கொள்வது என்பது குறித்தும், எந்தெந்த வகையில் தேர்வுக்கு தயாராவது என்பது குறித்தும் ”சூப்பர் 30” மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வின் போது பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரராஜு, ஆசிரியர்கள் பாபுவாணன், கமலஹாசன், முருகானந்தம், ஜனராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
இனிவரும் காலங்களில் என்.ஐ.டி, ஐ.ஐ.டிமற்றும் என்.இ.இ.டி பொது நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் காலம் வரை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் என்.ஐ.டி மாணவ,மாணவியர்களால் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.