No reuse of used oil in restaurants, ban on selling food items in fridge: Perambalur Collector orders!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மக்களின் இன்றியமையா தேவைகளில் முதன்மையானதாக விளங்குவது உணவே ஆகும். காலத்திற்கு ஏற்ப உணவு வகைகளும் உணவு முறைகளும் பெரும் மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. மக்களின் அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்வதில் ஹோட்டல்களும், பேக்கரிகளும், துரித உணவகங்களும் பெருமளவில் பங்காற்றி வருகின்றன. உணவை தயாரிக்கும் ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் உணவின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொருட்டு செயல்பட்டு வரும் துறையே உணவு பாதுகாப்புத் துறை ஆகும்.
விளம்பரம்:
சமீபத்தில் அசைவ உணவு பிரியர்களால் பெரிதும் விரும்பப்படுவது ஷவர்மா, கிரில் சிக்கன், சிக்கன் பார்பிக்யூ , போன்ற உணவு வகைகளே ஆகும். உணவு வணிகர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் சிக்கன் மற்றும் மட்டன் வகைகளை அன்றாடம் கொள்முதல் செய்யவும், பொறிக்கப்பட்ட சிக்கன், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களை உடனே பயன்படுத்தவும், மேலும் அவற்றை குளிர்பதன பெட்டியில் வைத்து பராமரித்து விற்பனை செய்யக் கூடாது எனவும், செயற்கை வண்ணங்களை சிக்கன் மற்றும் மட்டன் உணவு வகைளில் உபயோகிக்க கூடாது எனவும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி உள்ளிட்ட சட்னி வகைகள், மோர் மற்றும் தயிர் ஆகியவற்றின் தரத்தை தினசரி ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்னி வகைகளையும், மோர் மற்றும் தயிர் வகைகளை தேவையான அளவிற்கு மட்டும் தயாரிக்கவும், ஒரே நேரத்தில் அதிக அளவில் தயாரித்து இருப்பு வைக்க கூடாது எனவும், உணவு வணிகர்கள் சரியான கால நேரத்தில் பயன்படுத்தவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் சூடான டீ, காபி, சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பேக்கிங் செய்யவோ, பரிமாறவோ கூடாது எனவும், உத்தரவிடப்படுகிறது. இவற்றை மீறும் உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அபராதம் விதிக்கவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கவும், நோட்டீஸ் வழங்கவும், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் விற்பனையில் ஈடுபட்டால் உணவு வணிகரின் உரிமம், பதிவுச் சான்றிதழ் நிரந்தரமாக ரத்து செய்ய மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு வணிகர்கள் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் உணவு பாதுகாப்பு ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ள சுய மதிப்பீட்டு படிவங்கள் (Self Assessment Form) விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உணவு வணிகர்கள் அனைவரும் சுய மதிப்பீட்டு படிவங்களை தங்களது வணிகம் செய்யும் இடங்களில் தாங்களே ஆய்வு செய்து சுயமதிப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுய மதிப்பீட்டில் தங்கள் நிறுவனம் எந்தெந்த இடங்களில் எல்லாம் மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளது என்பதை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சியை உணவு வணிகர்கள் அனைவரும் பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் நுகர்வோர்களுக்கு உணவின் தரம் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: