Northeast Monsoon: Rainwater drainage cleaning and dredging works; Collector Venkata Priya Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர்புகாத வகையிலும் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்துவிடாமலும் மேலும் அதிகப்படியாக தேங்கும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவாமல் தவிர்க்கும் வகையிலும் எதிர்வரும் பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையிலும் வரும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

மழைநீர் வடிகால்களை அனைத்தையும் பெரிய மழைநீர்வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யப்படவேண்டும். பெரிய மழைநீர் வடிகால்களில் சேகரம் ஆகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்ராடிங் இயந்திரம், ஜேசிபி இயந்திரம் மற்றும் தேவைப்படும் இதர இயந்திரங்களை போதுமான அளவில் ஏற்பாடு செய்து பயன்படுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட இயந்திரங்கள் இல்லாத உள்ளாட்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர சங்கங்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்துக் கொள்ளலாம். மேலும் பணியின் அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு தேவைப்படும் இயந்திரங்களை உரிய ஒப்பந்த வழிமுறைகளின்படி பெற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நடுத்தர மற்றும் சிறிய மழைநீர் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் ஈடுப்படுத்திக் கொள்ள வேண்டும். வடிகால்களில் படிவுகளை அகற்றும்போது வடிகால் ஆரம்பப்பகுதியில் இருந்து தொடங்கி வடிகால் இறுதி பகுதி வரை முழுமையாக பணியினை முடிக்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அனிந்து பணிசெய்வதற்கு அறிவுறுத்தவேண்டும். மழைநீர்வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு போதுமான தளவாட சாமன்களை முன்னேற்பாடு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

உள்ளாட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஆறு நாட்களுக்குள் பணியினை முடிப்பதற்கு ஏதுவாக குடியிருப்பு பகுதிகளை பிரித்திட வேண்டும். நகராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு இடம் வீதம் என ஆறுநாட்களும் பகீர்வு செய்து தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள அனைத்து வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றிய பின்னரே, அடுத்த இடத்தில் பணியினை மேற்கொள்ளவேண்டும். இதற்கான செயல்திட்டத்தினை உள்ளாட்சிகளில் உள்ள அனைத்து பொறியாளர்களும் அனைத்து சுகாதார அலுவலர்களுடன் இணைந்து தயார் செய்ய வேண்டும்.

இத்திட்டத்தினை முழுமையாக 6 நாட்களுக்குள் செயல்படுத்தி முடித்திட தேவையான வாகனங்கள், பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் ஆகியோர்களை வார்டு மற்றும் நாள் வாரியாக பொறுப்பு நிர்ணயம் செய்து உத்திரவு வழங்க வேண்டும். இச்செயல் திட்டக்காலத்தில் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விடுப்பில் செல்லக்கூடாது. அகற்றப்பட்ட வடிகால் படிவுகளை அன்றைய தினமே அப்புறப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படவேண்டும். மழைநீர் வடிகால்கள் மீது ஆக்கிரமிப்புகள் இருப்பின் பணிக்கு முந்தைய தினமே சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பு தாரர்களுக்கு தெரியப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வார்டுகளில் உள்ள சிறுபாலங்களை கணக்கீட்டு படிவுகளை அகற்றி கழிவுநீர் தடையின்றி செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுபாலங்களில் மின்சார கேபிள்கள், டெலிபோன் கேபிள்கள் மற்றும் குடிநீர்குழாய்கள், இடையூறாக இருப்பின் அதனை மாற்றி அமைப்பதற்கு பொறியியல் பிரிவினால் சம்மந்தப்பட்ட துறையினர் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடிகால்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்கள் மற்றும் 100 மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் கம்பி வலை பொறுத்த வேண்டும். வடிகால்களிடையே இணைப்பு இல்லாத இடங்களை முறையாக இணைக்க வேண்டும். வடிகால் படிவுகள் அகற்றும் போது வடிகால்கள் மற்றும் தெருக்களில் சேகரம் ஆகியுள்ள திடக்கழிவுகள் கட்டிட இடிபாடுகள் மற்றும் செடி, கொடி, மற்றும் புதர்களை முழுமையாக அகற்றிட வேண்டும்.

பணிநடைபெறும் பகுதிகளில் உள்ள குறுகிய சந்துகளில் திடக்கழிவுகள் சேகரம் ஆகியிருந்தால் உடன் அகற்றப்பட்டு கிருமிநாசினி தெளித்து மீண்டும் திடக்கழிவுகள் சேராமல் கண்காணிக்கப்பட வேண்டும். காலியிடங்களில் சேகரம் ஆகியுள்ள திடக்கழிவுகளையும் மழைநீர் தேங்கும் தேவையற்ற கழிவுகளையும் அகற்றிட வேண்டும். சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் பொறியியற்பிரிவு மூலம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிமுடிவடைந்த நிலைகளில் கொசுமருந்து தெளிக்க வேண்டும்.

மேலும் பணி நடைபெறும் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் குடிநீர் குழாய் கசிவு அல்லது உடைப்பு ஏதேனும் இருப்பின் உடன் சீரமைக்கப்படவேண்டும் தெருவிளக்கு ஏதேனும் எரியாமல் இருப்பின் உடன் சீரமைக்கப்படவேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்பணிகள் நடைபெறுவதன் மூலம் தாழ்வான பகுதிகளில் நீர்தேங்குவது தவிர்க்கப்படுவதுடன் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கி நிற்கும் நீரினால் நோய்தொற்று ஏற்படா வண்ணம் தடுக்கபடும்.

மேலும், மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்துவதையும், அகற்றுவதையும் கண்காணிக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!