Number of dogs and harassment in Perambalur district increased: Public demand to control || பெரம்பலூர் மாவட்டத்தில் நாய்களின் எண்ணிக்கையும், தொல்லைகளும் அதிகரிப்பு : கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில சுற்றித்திரியும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளர்ந்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தற்கு நிகராக, நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய கிராமங்களில் , நாய்கள் கூட்டம் கூட்டமாக கும்மாளமிட்டு சுற்றித் திரிகின்றன. இதனால், ரோட்டில் நடந்து செல்வோர் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்வோரை கண்டதும் நாய்கள் துரத்துகின்றன. வண்டியில் செல்வோர் பயத்தில் கீழே விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர்.
சில நேரங்களில் நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. மேலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தூங்க விடாமல் இரவு முழுவதும் ஊளையிட்ட வண்ணமாக உள்ளது.
அவ்வழியாக வருவோரையும், போவோரையும் மிரட்டி விரட்டுவதுடன், குழந்தைகள், ஆடு, மாடுகளையும், விரட்டி விரட்டி நாய்கள் கடித்து குதறுகின்றன. அதனால் கால்நடை வளர்ப்போரும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
(வெறி) நாய் கடித்தால் உண்டாகும் ரேபிஸ் நோய் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மேலும் குரல் எழுப்பும் தசைகளையும் இறுக்கும். இதனால் வெறிநாய் கடித்தவர்களின் குரல் நாய்கள் குரைப்பதை போல மாறிவிடுகிறது. அதோடு வலி, சோர்வு, பயம், தூக்கமின்மை, தண்ணீரைக் கண்டால் பயம் ஆகிய அறிகுறிகளும் காணப்படும். ரேபிஸ் நோய் முற்றினால் குணமாக்க மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலரை நாய்கள் கடிக்கும் முன் விரைவான நடவடிக்கை எடுக்கவும், மேலும், வளர்ப்பு நாய்களுக்கு உரிய அனுமதி பெற்று, வீதிகளில விடாமல் வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.