Official Language Awareness Rally; Collector in Perambalur launched!
தமிழ் ஆட்சிமொழி சட்டம் கடந்த 1956-ல் இயற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 7 நாள்கள் ஆட்சிமொழி சட்ட வாரமாக பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 21.02.2023 அன்று முதல் 28.02.2023 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது.
முதல் நாளான மற்றும் உலக தாய்மொழி நாளான இன்று, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி, சங்குபேட்டை வழியாக சென்று திரும்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர், தமிழன் என்று சொல்லுங்கள், தலைநிமிர்ந்து நில்லுங்கள், பிறமொழிகளை வாழவைத்து தன்னையும் காத்துநிற்கும் மொழி, தமிழ் மொழியே, தனிமொழியானதும் தமிழே தாய்மொழியானதும் தமிழே, தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே, மொழி என்றால் உயிரின் நரம்பு, முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழழென்று சங்கே முழங்கு, தாயினுஞ் சிறந்தது தமிழழே தரணியிலுயர்ந்தது தமிழே, எங்கும் தமிழ் எதிலும் தமிழ், உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே, அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவோம், தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் மாணவ, மாணவியர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் “அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தமிழில் பெயர்ப்பலகை அமையட்டும், தமிழ்நாட்டின் வீதியெல்லாம் தமிழ் தழைக்கட்டும்” என்பதை வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.
அரசு, தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் தமிழ் செம்மல் கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் இலக்கிய அமைப்பினர், தூய் தமிழ் பற்றாளர்கள், பதியம் இலக்கிய சங்கத்தினர் உள்ளிட்ட கவிஞர்கள், தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.