தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2015-2016-ஆம் ஆண்டிற்கான கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி-26 முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர், பெரம்பலூர் ஆகிய நான்கு ஒன்றியங்களிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் நடத்துவதற்கான நிதியை மாவட்ட ஆட்சியர் அந்தந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வழங்கினர்.
விளையாட்டுப்போட்டிகள் ஆண், பெண் இருபாலாருக்கும் தனிநபர் போட்டிகள் தட களப் போட்டிகளான 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகியவையாகும். குழுப் போட்டிகளான கையுந்து பந்து, கபாடி, கால்பந்து ஆகியவையாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களால் விளையாட இயன்ற இரு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஒரு கிராமத்தில் குடியிருப்பவர் வேறு கிராமத்தில் இதே போட்டிகளில் பங்கேற்க கூடாது. ஆண், பெண் இருபாலாருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற உள்ளது. வயது வரம்பு கிடையாது. விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.
எனவே அந்தந்த கிராம ஊராட்சிகளில் நடைபெறும் விளையாட்டு;ப்போட்டிகளில் பெருமளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.