பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் துறை தெரிவித்துள்ளதாவது :
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு தேர்தல் நாளன்று, வாக்களிக்கும் பொருட்டு விடுமுறை வழங்க வேண்டும்.
தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு எந்தவித பிடித்தமும் இல்லாமல், ஊதியம் வழங்க வேண்டும். ஒரு ஊழியரோ அல்லது தொழிலாளரோ அவர் இருப்பிடம் ஒரு தொகுதியிலும், பணியிடம் ஒரு தொகுதியிலும் இருந்தால், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு கொடுக்க வேண்டும். தற்காலிக பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில், போக்குவரத்து நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், பெட்ரோல் பங்குகள், தொழிலகங்கள், கடைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தேர்தல் நாளன்று, ஊதியத்துடன் கூடி விடுப்பு வழங்க வேண்டும் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.