On the eve of International Girl Child Day, Collector Santha presented deposit funds to parents.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டிலான வைப்பு நிதி பத்திரங்களை 38 பெற்றோர்களுக்கு கலெக்டர் சாந்தா வழங்கினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும், கல்விக்காகவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகள் கல்விக்காகவும், குழந்தை திருமணத்தை தடுத்து, உயர் கல்வி கற்கவேண்டும் என்பதற்காக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி திட்டத்தினை தமிழக அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது,
அதனைப் போன்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு பெண் குழந்தைகளின் எதிர் காலத்தினை கருத்தில் கொண்டும், பெண் குழந்தைகளை குடும்ப சுமையாக பெற்றோர்கள் கருதக்கூடாது என்பதற்காகவும், பெண் குழந்தைகள் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை வைத்துள்ள பெற்றோரிடம் ரூ.50 ஆயிரத்திற்கான வைப்பு நிதியும், 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம்- வீதம் வைப்பு நிதி வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி பெண் குழந்தைகளின் எதிர்காலத்தினை பாதுகாத்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 2 பெண் குழந்தைகள் வைத்துள்ள 38 பெற்றோர்களின் குடும்பத்திற்கு ஒரு பெண் குழந்தைக்கு தலா ரூ.25 ஆயிரம்- வீதம் 76 பெண் குழந்தைகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பீட்டிலான வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்படுவதன் முதற்கட்டமாக 5 பெற்றோர்களிடம் பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. பெண் குழந்தைகள் 18 வயது முதிர்வு அடைந்தவுடன் அவர்களுக்கு கணிசமான வைப்பு நிதி அவர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். எனவே பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளையும் பாதுகாத்திட வேண்டும் என தெரிவித்தார். அப்போது, மகிளா சக்தி கேந்திரா திட்டம், குடும்ப வன்முறை பாதுகாப்பு, வட்டார சமூக விரிவாக்கத்தை சேர்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.