One Village One Graveyard Campaign: Resolution at the state committee meeting of the TAMILNADU UNTOUCHABILITY ERADICATION FRONT in Perambalur!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழுக் கூட்டம் பெரம்பலூரில், மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. மாநில சிறப்புத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.மகேந்திரன். பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் இ.மோகனா, துணைப் பொதுச் செயலாளர்கள் க.சுவாமிநாதன், பி.சுகந்தி, பசெல்வன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் மாநிலக் குழு உறுப்பினர்களும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விசாரணை என்ற பெயரால் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் மக்களை துன்புறுத்தாமல், உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், குற்றம் நிகழ்ந்து 54 தினங்கள் கடந்த பின்பும் குற்றவாளிகளைக் கணடுபிடிக்க முடியாத சிபிசிஐடி காவல்துறை மனிதக் கழிவு கலந்துள்ள நீரைக் குடித்த குடும்பத்தினர்களையே குற்றவாளி போல் தினசரி விசாரித்து வருவது விநோதமாக உள்ளது. எனவே, வேங்கைவயல் தலித் மக்களை விசாரணை என்ற பெயரால் துன்புறுத்துவதைக் கண்டித்தும் உண்மைக் குற்றவாளிகளைக் உடனடியாக கைது செய்யக் கோரியும் 03.03.2023 திருச்சி சிபிசிஐடி காவல்நிலைய முற்றுகை நடத்துவது,
தலித் மக்கள் மீது அதிகரித்து வரக்கூடிய சாதிவெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திடவும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்திடவும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட வரையறைகளைப் பாதுகாத்திடக் கோரியும் அகில இந்திய அளவில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான முன்னணி சார்பில் நடைபெறுகிற போராட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, கடலூர், திருப்பூர், வேலூர் ஆகிய 5 மாநாகராட்சிகளில் மார்ச் 14 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது
சாதியின் அடையாளங்களை ஒழிக்காமல் சாதிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்கிற முறையில் சாதியின் அடையாளமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கிராமத்திலும் சாதிக்கு ஒரு சுடுகாடு என்று இருப்பதை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் அண்ணல் அம்பேத்கரின் பிறந்ததினமான ஏப்ரல் 14 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே ஊரு ஒரே சுடுகாடு என்கிற தலைப்பில் கருத்தியல் பிரச்சார்த்தை. மேற்கொள்வது,
இந்திய அளவில் துப்புரவுப் பணி தொடர்பான விஷவாயு மரணங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் நடைபெறுகிறது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு எதிரான போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இப்போதும் துப்புரவுப் பணிகளுக்கு என்று புதிய கருவிகளை உருவாக்குகிற நோக்கத்துடன் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் துப்புரவுப் பொறியியல் துறையை துவக்கிட வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் இறுதி வாரத்தில் சென்னையில் கவன ஈர்ப்பு மாநாடு நடத்துவது,
இந்தியாவின் மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் சாதி மற்றும் மத ரீதியான பாராபட்சங்கள் கொடுடூரமாகக் கடைபிடிக்கப்படுவதையும் அதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதையும் நாடு கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனங்களில் எந்த வரைமுறையும் இல்லாமல் இடஒதுக்கீடு முறைமைகள் மீறப்படுவதும் தொடர்கிறது. எஸ்சி, எஸ்டி, ஒபிசி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 1000 இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் இடஒதுக்கீட்டு மீறல்களால பறிபோகிறது. இந்நிலையில்
சென்னையில் ஐஐடிகளின் அநீதிகளுக்கு எதிரான சிறப்புக் கருத்தரங்கம் ஒரிரு மாதங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்னமும் பல்வேறு கிராமங்களில் குடி ஊழியம் என்கிற கொடூரமான கொத்தடிமை முறை நீடித்து வருகிறது. சலவைத் தொழில் செய்வோர், முடிதிருத்துவோர், மயானப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழில்கள் தலைமுறை தலைமுறையாக சில குறிப்பிட்ட குடும்பங்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை கல்வி கற்று இந்த தலைமுறைதொழிலிலிருந்து விடுபட முயற்சித்தாலும் கூட குடி ஊழியம் என்கிற பெயரால் இக்குடும்பங்களின் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுகிறது. எனவே குடிஊழியம் எனும் குலத் தொழிலை செய்ய மாட்டோம், தலைமுறை இழிவை ஏற்கமாட்டோம் என்கிற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் விரிவான இயக்கங்களை நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திராளக பலர் கலந்து கொண்டனர்.