Opposing protest to close and open Tasmac liquor store near Perambalur!
பெரம்பலூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தியும், அதற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற இருந்த நிலையில், கடையை அகற்றக்கூடாது திறக்க வேண்டும் என வலியுறுத்தி குடிமகன்ளும் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் திட்டக்குடி -அரியலூர் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு, மது அருந்தும் மது பிரியர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தகராறில் ஈடுபடுவதோடு, மது அருந்திவிட்டு சாலையின் குறுக்கே விழுந்து கிடந்து, போக்குவரத்திற்கு இடையூறாக செயல்படுவதாலும் விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருவதோடு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கடையின் அருகே குடியிருப்புகள், திருமண மண்டபம் , சந்தை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ,ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று மதுபான கடை அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்துவதற்காக திரண்டிருந்தனர். அவர்களிடத்தில் காவல்துறையினரும், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளும் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடையை மாற்று இடத்தில் வைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடை தற்காலிகமாக பூட்டப்பட்டு இருந்தது.
அப்பொழுது டாஸ்மாக் மதுக்கடைக்கு மது வாங்க வந்த மது பிரியர்கள் சிலர் கடையை உடனடியாக திறக்க வேண்டும், எங்களுக்கு மது வேண்டும் மது குடிக்காவிட்டால் நாங்கள் இறந்து விடுவோம் என்று கூறியும் தங்களுக்கு உடனடியாக மது வேண்டும் என்று கூறியும் பிரச்சனையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடை முன்பு சாலையில் படுத்து மறியல் செய்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினரிடம் தகராறு செய்ய முயன்றதையடுத்து காவல்துறையினர், மது பிரியர்களை விரட்டியடித்தனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளிடம் கடையை விரைவில் மாற்று இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அகரம்சீகூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக இருந்தது.