ORS solutions Provide ceremony for children under 5 in Perambalur district
வயிற்றுப்போக்கினால் சோர்வடைந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஓ.ஆர்.எஸ்.கரைசல் கொடுக்க வேண்டும், என்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 28,420 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, என சுகாதாரத்துறை துணை இயக்குநர் சம்பத் தகவல் தெரவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் நிகழ்வு மே.28 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சங்குப்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் தி.ஸ்ரீதர், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் சுகாதாரத் துறை துணை இயக்குநர் தெரிவித்ததாவது:
28.5.2018 முதல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 46,444 குழந்தைகளில் 28,420 குழந்தைகளுக்கு ஓ.ஆர;.எஸ் கரைசல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்படுவதால் வயிற்றுப்போக்கு குறைந்து, அடுத்த மூன்று மாதங்களுக்கு குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். இக்கரைசல் உலக சுகாதார நிறுவனத்தாலும், இந்திய அரசாலும் பரிந்துரைக்கப்பட்டதாகும்.
மேலும், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு மிதமான உணவை தொடர்ந்து கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு உணவூட்டுவதற்கு முன்பும், மலம் கழுவிய பின்னரும் தாய்மார்கள் தங்களது கைகளை தூய்மையாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரத்தில் ஒவ்வொரு வயிற்றுப்போக்கிற்கு பின்னும் ஓ.ஆர்.எஸ் கரைசலை 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு 50மி.லிட்டரும், 7 மாதம் முதல் 2 வயது வரை 50 முதல் 100மில்லி லிட்டரும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 100 முதல் 200 மில்லி லிட்டரும், 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 200மி.லி அல்லது குழந்தையால் குடிக்க முடியும் அளவிற்கு வழங்கலாம்.
அதே போல துத்தநாக மாத்திரையினை சுத்தமான கரண்டியில் நீரில் வைத்து ஊறவிட்ட பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நின்றாலும் தொடர்ந்து 14 நாட்கள் வழங்க வேண்டும்.
2 மாதம் முதல் 6 மாதம் வரையுள்ள குழந்தைளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து அரை மாத்திரையினை காலை ஒரு வேளை அளிக்க வேண்டும். 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் அல்லது தண்ணீருடன் சேர்த்து 1 மாத்திரையினை காலை ஒரு வேளை அளிக்க வேண்டும்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு இருந்தால் உடனடியாக ஓ.ஆர்.எஸ் கரைசலை கொடுக்க வேண்டும். தற்போது சுகாதாரத்துறை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பகுதிகளிலும் அங்கன்வாடிப்பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாக 5வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்த ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்கி, அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தினையும் தெளிவாக கூறி வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு வரும் பணியாளர்களின் அறிவுரையினை பின்பற்றி குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரையினை வழங்க வேண்டும், என தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் பூங்கொடி, கொள்ளைநோய் தடுப்பு மருத்துவர் அரவிந்தன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன் நலக்கல்வியாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.