Paneer grape cultivated in Perambalur district

பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் எசனை கிராமம் அருகே அரசலூர் கைகாட்டி பகுதியில் தனது 4 ஏக்கர் விவசாய நிலத்திலேயே வீடு கட்டி தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வருபவர் முன்னோடி விவசாயி சுருளிராஜன் என்கிற பெருமாள்(49). இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் குளிர் மற்றும் மலைப்பிரதேசங்களை ஒட்டியுள்ள பகுதியில் மட்டுமே விளையக்கூடிய பயிர்களை 106 டிகிரி வெப்பநிலை பதிவாகும் பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்து சாதிக்க வேண்டும் என்றஆர்வத்தில், தனது நிலத்தின் ஒரு பகுதியில் அரை ஏக்கர் பரப்பளவில், மருத்துவ குணம் கொண்ட பன்னீர் திராட்சை சாகுபடியை தொடங்கினார்.

இதற்காக, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருச்சி மாவட்டம், எரக்குடி கிராமத்தில் உள்ள திராட்சை பண்ணையில் இருந்து, திராட்சை குச்சிகளை வாங்கி வந்து நட்டு வைத்தார், இதற்காக, தூண் கற்களை நாட்டு இரும்பு பைப்புகள் மூலம் பந்தல் அமைத்து,வெயில் அதிகம் படாத வகையில் பசுமைக் குடில் அமைத்து, ரெயின் ஓஸ் முறையில் பாய்ச்சலும், காய்ச்சலும் என்ற முறையில் தண்ணீர் தெளித்து வந்தார்.

ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளின் சாணம், மண்புழு உரம், கடலை, ஆமணக்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி கடந்த ஒன்றேகால் வருடமாக திராட்சை கொடியை பாதுகாப்புடன் வளர்த்து, பன்னீர் திராட்சை பழங்களை அமோகமாக உற்பத்தி செய்து, தற்போது கொத்து, கொத்தாக காய்ச்சு தொங்கும் திராட்சை பழங்களை அறுவடை செய்து இப்பகுதி மக்களுக்கு ஒரு கிலோ 120 ரூபாய் என விற்பனை செய்து வருகிறார்.

இந்த சவாலான சாதனை குறித்து விவசாயி சுருளி கூறியதாவது,

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட நான், இப்பகுதியில் மாற்று முறை விவசாயத்தில் ஈடுபட வேண்டுமென முடிவு செய்து முழுக்க முழுக்க இயற்கை உரங்களைப் மட்டுமே பயன்படுத்தி காய்கறி பழ வகைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து காய் கறிகளை உற்பத்தி செய்து விற்று வருகிறேன்.

அந்த வகையில் குளிர் பிரதேசங்கள் உள்ளிட்ட மலையோர கிராமங்களில் மட்டுமே விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பன்னீர் திராட்சையை சாகுபடி செய்வதென முடி வெடுத்தேன் கடந்த ஒன்றே கால் ஆண்டுகளுக்கு முன்பு சாகுபடியை தொடங்கி, தற்போது நாளொன்றுக்கு சுமார் 150 முதல் 200 கிலோ வரை அறுவடை செய்து இப்பகுதியிலேயே விற்பனை செய்து வருகிறோம்.

முழுக்க முழுக்க இயற்கை முறையில் மனைவி மற்றும் மகள்கள் என குடும்ப உறுப்பினர்களை மட்டுமே வைத்து சாகுபடி செய்யப்பட்டுள்ள இந்த பன்னீர் திராட்சை பழங்கள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் பெரம்பலூர்&ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொது மக்கள் திராட்சை தோட்டத்தை ஆச்சர்யத்துடன் பார்ப்பதோடு, தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டு திராட்சை பழங்களையும் வாங்குவதோடு தங்களையும் பாராட்டியும் செல்வதாகவும், தற்போது சாகுபடி செய்துள்ள திராட்சை கொடிகளை முறையாக பராமரித்து வந்தால் இன்னும் 20 வருடங்களுக்குஇந்த கொடிகளில் 4 மாதத்திற்கு ஒரு முறை என, 2 வருடத்திற்கு 5 முதல் 6 சீசன்கள் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 5 டன்னிற்கு மேல் திராட்சை பழங்களை அறுவடை செய்து 5 முதல் 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றார்.

இதேபோல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி பாகற்காய், புடலை, சுரைக்காய், பீர்க்கன் காய் போன்றவற்றை ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்து வருகிறேன் என்றும், வேளாண் துறை மூலம் போதிய ஆலோசனை கிடைத்தால் குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய ஆப்பிள் பழம், ஏலக்காய், கிராம்பு, மிளகு போன்ற வாசனைப் பொருட்களையும் விளைவிப்பதே தனது லட்சியம் என்கிறார்.

வறச்சி மாவட்டமான பெரம்பலூரின் வெப்பநிலையை பற்றி கவலை கொள்ளாமல் மண் வளத்தை மட்டுமே நம்பி, மனம் தளராமல் இதுபோன்று இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கும் விவசாயிகளை வேளாண் துறையினர் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு தேவையான மானியம் சார்ந்த உதவிகளை செய்தால் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் தலைத்தோங்கும் என்பத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை!


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!