Parivendhar a Great leader! by VCK Tirumavalavan at Perambalur

பெரம்பலூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மதிமுக மாவட்ட செயலாளர் சின்னப்பா, மாநில விவசாய பிரிவு தலைவர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விசிக மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐஜேகே கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, மாநில பொதுசெயலாளர் ஜெயசீலன் உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தலைமையிலான 11 கட்சிகள் கூட்டணி அமைந்திருக்கிறது. இதனால் நான் வெற்றி பெற்றுவிட்டதாக கருதுகிறேன்.

நான் செல்லும் இடங்களில் முன்னாள் அமைச்சர் ஆ ராசாவை போல் செயல்படுங்கள் என கேட்கிறார்கள் நான் அத்தனை திட்டங்களையும் அவருடைய ஒத்துழைப்போடு உறுதியாக பகுதிக்கு செய்து கொடுப்பேன்.

50 ஆண்டு காலமாக கல்வித்துறையில் பணியாற்றி வருகின்றேன். நான் அரசியல் கட்சி தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது ஆனால் மக்கள் பணியில் 40 ஆண்டுகள் பணியை செய்திருக்கிறோம் . தமிழக மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்திருக்கிறோம்.

நாம் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியாக இருக்காது கடந்த தேர்தலில் அப்படி ஒரு முடிவை எடுத்தேன் தற்போது புரிந்து கொண்டேன். இந்த தேர்தலில் தொகுதி மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் சேவை செய்ய சரியான இடம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வகையில் திமுகவின் சின்னமான உதயசூரியன் போட்டியிடுகிறேன்

அரசியல், கல்வி, மருத்துவம் ஆகிய மூன்று சேவைகளை ஆற்றி வருகிறேன். அரசியலில் மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள்என்பார்கள். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த தேவையும் இல்லை.

நான் பெருமைக்காக சொல்லவில்லை உண்மையை சொல்கிறேன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றுவேன்.
மிக விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார். இந்திய அளவில் பொருளாதரத்திலும் சமூகத்திலும் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும்.

நேற்று, நடந்த பொதுக்கூட்டத்தில் என்னை பற்றி ஒரு தலைவர் தவறாக பேசுகிறார். அவர் மாட்டு வியாபாரம் செய்யும் தலைவர். மிகப் பெரிய வருமானம் எங்கு கிடைக்கும் என நினைப்பவர். அவருடைய சிந்தனைகள் மக்கள் பக்கம் இல்லை. அவர் ஒரு கல்லூரி நடத்துகிறார். அது அவரது கல்லூரி அல்ல. அவரது சமுதாய மக்களால் கட்டப்பட்ட கல்லூரியை சமுதாய மக்களை ஏமாற்றி சொந்தமாக்கிக் கொண்டார்.

உங்களது கல்லூரியில் தரம் இருக்கிறதா? கல்லூரி ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் தரவில்லை. எங்களது குழுமத்தில் மக்கள் கொடுக்கும் பணத்துக்கு தரமான கல்வி தரப்படுகிறது.

ஆண்டுக்கு 6000 பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தருகிறோம். ஆண்டுக்கு 7000 பேருக்கு இலவச கல்வி தருகிறோம். இந்தியாவில் தரமான கல்வி வழங்கும் ஒரே நிறுவனம் எங்கள் நிறுவனம். அவர் நேற்று ஒன்று பேசுவார். இன்று ஒன்று பேசுவார். அவர் பொய்யர். அதிமுக வேட்பாளர் என்னை டெபாசிட் இழப்பேன் என்கிறார்.
10 தோழமை கட்சிகளின் கூட்டணியில் இருக்கிறேன்.

தவறான கூட்டணியில் போட்டியிட்ட போது கூட நான் டெபாசிட் இழக்கவில்லை. பாமக போட்டியிடும் 7 தொகுதிகளும் டெபாசிட் இழக்கும். காடுவெட்டி குரு குடும்பத்தினர் அவருக்கு எதிராக வேலை செய்து வருகிறார்கள். எங்களது கட்சிக்கு கள்ளக்குறிச்சி பெரம்பலூர் உட்பட தமிழகத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிடும் தகுதி இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் நாங்கள் 3 பேரும் (திருமா, ஆ.இராஜா, வேந்தர்) உள்ளத்தால் ஒரே நோக்கம் ஒரே கொள்கையோடு செயல்படுகிறோம். நான் சென்று வந்த இடங்களில் வரவேற்பு அதிகம்.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவேன் என சொல்கிறார்கள். அதற்காக மெத்தனமாக இருக்காமல் செயல்படுங்கள்.

என்னை அந்நியன் என்கிறார்கள். மால்வாய் (திருச்சி மாவட்டம் லால்குடி) கிராமம் எனது மூதாதையர் வாழ்ந்த கிராமம். எங்களது பூர்வீக கோவில் பச்சையம்மன் கோவில் உள்ளது. என்னை பார்க்க முடியாது என சொல்கிறார்கள் என்னை சந்தித்தவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும், என பேசினார்.

முன்னாள் அமைச்சர் ராஜா பேசுகையில், ஜாதி அடையாளம் இல்லாமல் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கட்சி நடத்த முடியாது. ராமதாஸ் ஜாதி பெயரை வைத்துக் கொண்டு, குடும்பம் பிழைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் செய்கின்ற ஈழ தனமான அரசியல்வாதி.

பெரம்பலூர் மருத்துவ கல்லூரிக்கு எனது சொந்த நிலம் கொடுத்தேன். ஜெயலலிதா நிறுத்தி வைத்தார். தொழிற்சாலைகள் விமான உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலை நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அதையும் ஜெயலலிதா நிறுத்தி விட்டார். அரசியலில் சுயநலனுடன் பொதுநலனும் சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அதிமுக ஜெயலலிதாவிடம் அது இல்லை.

பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. பிஎஸ்என்எல் மூடப்படும் நிலையில் இருக்கிறது. அத்தனை பொதுத்துறையையும் அம்பானி குடும்பத்துக்கு தாரை வார்க்கிறது மோடி அரசு.

இந்து, கிறிஸ்தவ முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறது. இந்திய அரசியல் சட்டம் 18 மாதங்கள் அரசியல் நிர்ணய சபையில் கூடி இயற்றப்பட்டது. இந்த அரசியல் சட்டம் 150 முறை திருத்தப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டத்தை திருத்தி சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு முயற்சிக்கிறது. இந்த முயற்சியை விரட்டி அடிக்க வேண்டும்.

எனவே மீண்டும் பெரம்பலூர் ஒரு புதிய எழுச்சி பெற வேண்டுமானால் பாரிவேந்தரை ஆதரித்து அவருக்கு ஓட்டு போடுங்கள். மத்திய அரசானது பாசிச ஆட்சியை நடத்தி வருகின்றது, மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதற்காக பாரிவேந்தரை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், தனி மனிதனான பாரிவேந்தர் சாதித்துள்ளார். இதனால் அவர் மீது ராமதாசுக்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. எந்த இடத்திலும் பாரிவேந்தர் சாதிப் பெயரைச் சொல்லி வன்முறையை செய்து வளர்ச்சி அடையவில்லை, பிற சாதியினர் மீது நெருப்பைக் கக்கி, குடிசைகளை கொளுத்தி அதனால் தலைவரானவர் அல்ல!

பாரிவேந்தர் தன்னுடைய தனிப்பட்ட உழைப்பால் வளர்ந்தவர், தற்போது இவர் வெற்றி பெற்றால் மத்தியில் ராகுல் காந்தி பிரதமரானால் மத்தியில் ராஜாவும், பாரிவேந்தரும் அமைச்சர் ஆவார்கள்.

இந்தியாவிற்கு ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்றால் மோடி தலைமையிலான நடைபெற்ற ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும், ஜனநாயகத்தை பாதுகாக்க சமூகத்தை பாதுகாக்க ராகுல் காந்தி மீண்டும் பிரதமராக வேண்டும் என அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். நான் கடந்த முறை எம்.பி தேர்தலுக்கு நின்ற போது எனக்கு வாக்களிக்க கோரி சங்கத்தினரிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு அவர்கள் என்னிடம் எந்த கைமாறும் எதிர்பார்த்ததில்லை, என்பதை நன்றியுடன் தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். மேலும், நான் விடுதலை சிறுத்தைகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி மறவாமல் பாரிவேந்தர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும். அதற்கு, அயராது கட்சியினர் பொறுப்பாளர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

இவர் வெற்றி பெற வேண்டும், ஏனென்றால், தளபதியின் கரம் வலுபெறவேண்டும், இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும். மோடியின் தலைமையிலானன சனாதன கும்பலை விரட்டியடிக்க வேண்டும், எனவே, தேசத்தை காப்பாற்ற, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, ஜனநாயத்தை பாதுகாக்க, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க, தொழில், வணிகம் மீண்டும் புத்துணர்வு பெற வேண்டும், அதற்கு நாம் பாரிவேந்தரை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில், ஐஜேகே, திமுக, காங்கிரஸ், கொமதேக, த.வா.க., ஐ.யூ,எம்.லீ, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஐஜேகே மாவட்ட தலைவர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் ஐஜேகே நகர செயலாளர் அழகுவேல் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!