Patta, flood relief funds can not be provided for the watershed occupied lands: High Court orders
நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்க முடியாது, என்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்பு கொடுங்குற்றம்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்து உள்ளனர். மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து 2 வாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி 8 வாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது சென்னை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலை அக்கிரமிப்புகளை அகற்றுவதுதான் அதிகாரிகளின் முக்கிய வேலை என்று நீதிபதி குறிப்பிட்டார். வெள்ளம் ஏற்படும் போது, நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்றும் வருவாய்த் துறை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.