Perambalur; 16 AMMA mini clinics in the district; Perambalur Collector Venkatapriya Information

File Copy

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்திடவும், உயர்தரமான மருத்துவ சிகிச்சையினை சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைத்து தமிழக மக்களும் பெற வேண்டும் என்பதற்காக பொது சுகாதார துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை உருவாக்கி புதிய மருத்துவமனைகளை ஏற்படுத்தி, மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதற்காக அதிகபடியான நிதி ஒதுக்கீட்டினை செய்து வருகிறது. இவ்வாறான தொடர் நடவடிக்கைகளால் தமிழகம் இந்தியாவிலேயே சுகாதாரத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது.

தமிழக அரசு மாவட்டங்களில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற பொதுமக்களின் சுகாதாரத்தில் அதிக அக்கறையோடு செயல்படுவதால் அதிகமான நலத்திட்டங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 3 வட்டார அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் 12 நடமாடும் மருத்துவ வாகனம் செயல்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், நமது பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருப்பெயர், கவுள்பாளையம், ரெங்கநாதபுரம், சிறுவாச்சூர் ஆகிய இடங்களிலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேனூர், திம்மூர், சிறுகன்பூர் ஆகிய இடங்களிலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தொண்டமாந்துறை, தொண்டபாடி, வேப்பந்தட்டை ஆகிய இடங்களிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பரவாய், ஒகளூர், கீழப்பெரம்பலூர் ஆகிய இடங்களிலும் மற்றும் பெரம்பலூர் நகராட்சி பகுதியில் ஒரு இடம் என் மொத்தம் 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 6 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.

அதில் முதல்கட்டமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேனூர், தொண்டமாந்துறை, திருப்பெயர் ஆகிய 3 இடங்களிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரவாய், ஓகளூர், கீழப்புலியூர் ஆகிய 3 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 10 இடங்களில் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் ஆனது காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். வாரத்தில் சனிக்கிழமை மட்டும் விடுமறை, மற்ற அனைத்து நாட்களிலும் மினி கிளினிக் செயல்படும். கிளினிக்குகளில் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 பணியாளர் ஆகியோர் பணிபுரிய உள்ளனர்.

கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் ,தலைவலி மற்றும் புறநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை தாய் சேய் நல பரிசோதனை, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி வழங்குதல், இரத்த அழுத்தம், சர்க்கரை, சிறுநீரில் உள்ள உப்பின் அளவு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு ஆகிய பரிசோதனைகள் ,முதியோர்களுக்கான சிறப்பு பரிசோதனை, அவசர சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் முதலான நோய்களுக்கு முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மிகுந்த உதவிகரமாக இருக்கும். இதனை பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தினை பாதுகாத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!