Perambalur: A meeting was held under the chairmanship of the Collector to brief the officials about the procedures and tasks to be followed at the counting center!
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டரூன கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
அப்போது, அவர் தெரிவித்ததாவது: பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுற்று வாக்கு எண்ணும் பணிகள் எதிர்வரும் 04.06.2024 அன்று பெரம்பலூர் அருகே உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள அனைத்து துறை அலுவலர்களும் காலை 5 மணிக்கு வருகை தர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் போதிய அளவில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் டேங்குகள் அமைத்து அவை முறையாக பராமரிக்கப்படுவதை நகராட்சி ஆணையர் மற்றும் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் உறுதி செய்திட வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் முகவர்கள், அலுவலர்கள் அனைவரும் உரிய அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் கணினி சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்து, அவர்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும். பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள சட்டமன்ற தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் மையத்தில் குறிப்பிடப்பட்ட மேஜைக்கு செல்வது அவசியம்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள், அலுவலர்கள் செல்வதற்கு தனித்தனியாக தடுப்புகள் அமைத்து வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரித்த நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் மட்டும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குமான வாக்கு எண்ணும் அறையில் அமைக்கப்பட்டுள்ள டேபிள்களுக்கான அலுவலர்கள் உரிய நேரத்தில் வருவதை அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் வாக்கு எண்ணும் அறையில் அனைவருக்கும் தெரியும் வகையில் எழுதப்படவேண்டும்.
வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள், உபகரணங்கள் இதர பொருள்கள் உள்ளதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை மின்சார வாரியம் உறுதி செய்ய வேண்டும். ஜெனரேட்டர் வசதிகள், அவற்றிக்கான எரிபொருள் உள்ளிட்டவைகளின் இருப்பு குறித்து பொதுப்பணித்துறை மின்சாரப் பிரிவினர் கண்காணித்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் உள்ள அனைவருக்கும் உரிய நேரத்தில் காலை மதிய உணவு, தேநீர், சிற்றுண்டிகள் வழங்கும் பணியினை வட்டாட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் ஒவ்வொரு நபரையும் காவல் துறையினர் முறையாக பரிசோதித்து அனுப்பி வைக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களுகம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காவல்துறை, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.