Perambalur: An inspection meeting was held under the leadership of the Collector to remove encroachments in Veppur and Alatur unions water bodies and provide consistent drinking water!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களில் உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஓவர்சியர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, கலெக்டர் கற்பகம் தெரிவித்ததாவது:

வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களில் உட்பட்ட கிராம மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். பல இடங்களில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் சிலர் பயிர் வைத்திருந்ததால் பயிர்களும் உயிர்களே என்ற அடிப்படையில் அவற்றை எடுக்காமல் இருந்தோம். அந்த பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டிருக்கும். கோடைகாலம் என்பதால் பயிர் செய்திருக்க மாட்டார்கள். எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர் நிலைகளை புனரமைக்க வேண்டும். வேப்பூர் ஒன்றியத்திற்கு புதிய குளங்கள் அமைக்க ஏற்கனவே பணிஆணை வழங்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில், அந்தூர், ஆண்டிக்குரும்பலூர், அசூர், அத்தியூர், எழுமூர், குன்னம், ஒகளுர், ஓலைப்பாடி, பரவாய், பென்ன்கோணம், பெரியம்மாபாளையம், பெருமத்தூர், சிறுமத்தூர், சித்தளி, திருமாந்துறை, துங்கபுரம், வயலப்பாடி மற்றும் வரகூர் ஆகிய 18 கிராமங்களில் சுமார் 2.20கோடி மதிப்பில் புதிய குளங்கள் அமைக்க ஏற்கனவே ஆணை வழங்கப்பட்டுள்ளது, அந்தப் பணிகளை மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்.

புதிய குளங்களை அமைப்பதோடு இருந்துவிடாமல், தற்போது உள்ள குளங்களை சீரமைக்க வேண்டும். குளங்கள், ஏரிகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். ஒரு வார காலத்திற்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு அதற்கான அறிக்கையினை சம்மந்தப்பட்ட கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் வழங்க வேண்டும்.

அதேபோல, கிராம பகுதிகளில் குடிநீர் சீராக வழங்கப்படுகின்றதா, குடிநீர் குழாய்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பழுதடைந்த நிலையில் குடிநீர் குழாய்கள் இருந்தால் அதனை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை அந்தந்த பகுதிகளின் ஓவர்சியர்கள், உதவிப் பொறியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்தப் பணிகளை முறையாக மேற்கொண்டு உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தால் சம்மந்தப்பட்ட பகுதிகளின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் நிலை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும், என தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!