பெரம்பலூர் அருகே விவசாயிகளின் நெல் கொள்முதலில் லட்சணக்கில் மோசடி செய்த ஊழியர்களை விவசாயிகளே சிறை பிடித்தனர்.
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், எழுமூரில் செயல்பட்டுவரும் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டை ஒன்றுக்கு 6 கிலோ வீதம் எடைப்போடும் இயந்திரத்தில் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊழியர்களை நெல்கொள்முதல் நிலையத்தில் சிறை வைத்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எழுமூர் கிராமத்தில்; அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகின்றது. இதில் எழுமூர், கீழப்புலியூர், சிறுகுடல், ஆய்க்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை எடை போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தாண்டிற்காண நெல் கொள்முதல் நிலையம் கடந்த 1-மாதத்திற்கு முன்பு செயல்படத் துவங்கியது. இதில் நாளொன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் சுமார் 900-மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், எடைபோடும் இயந்திரத்தின் மூலம் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகமடைந்த விவசாயிகள் வேறு இயந்திரத்தைக் கொண்டு எடைப் போட்டு பார்த்ததில் மூட்டை ஒன்றுக்கு சுமார் 5-கிலோ முதல் 9-கிலோ வரை எடை வித்தியாசம் இருந்து.
ஒரு மாத காலமாக எடை மோசடியில் ஈடுப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்கொள்முதல் நிலைய ஊழியர்களை கொள்முதல் நிலையத்திலையே சிறை வைத்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைக்கு முறையான ரசீது தருவதில்லை எனவும் வெறும் காகிதத்தில் எழுதி கொடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், நெல்லை எடை போடும் பணியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்களை பணிக்கு அமர்த்தி மோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.
இதுபோன்ற எடை மோசடியால் நாளொன்றுக்கு ரூ.60-ஆயிரத்திற்கு மேல் மோசடி ஈடுப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியும், இதுவரை விவசாயிகளிடம் மோசடி செய்த நெல்மூட்டைகளை கணக்கு செய்து உரிய தொகை திரும்ப வழங்க நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமில்லாமல்,
சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு ஊழியர்களை சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.