பெரம்பலூர் மாவட்டத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் மக்கள் சிந்தனைப்பேரவை ஆகியவை இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா – 2016 ன் துவக்க விழா நேற்று துவங்கி வரும் பிப்-7. வரை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் நடைபெறுகின்றது.
இரண்டாம் நாளான இன்று கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு இன்றைய புத்தகத் திருவிழா துவங்கியது. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் தமிழறிஞர்களைப் பற்றி தெரிந்துகொள்ள தனி அரங்கு, கோளரங்கம் போன்ற சிறப்பு வாய்ந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நடமாடும் ஏடிஎம் இயந்திரமும் புத்தகத் திருவிழா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இன்றைய நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய வழக்கறிஞர் எஸ்.சுமதி நவில்தொறும் நூல் நயம் என்ற தலைப்பில் பேசியதாவது:
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர;பு ” என்ற வள்ளுவப்பெருந்தகையில் வார்த்தைக்கிணங்க இன்றைய வாழ்க்கைச் சூழலை நாம் அமைத்துக்கொண்டாலே நாம் வாழும் காலம் அடுத்த தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும். வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் நாம் நமது வாழ்வியல் சூழ்நிலைகளை இழந்துகொண்டே இருக்கின்றோம்.
இன்றைய தலைமுறையினர் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை முற்றிலும் துறந்துவிட்டனர். கூட்டுக் குடும்பத்தால் ஏற்படும் நன்மைகளையும், பண்பாடுகளையும், மற்றவர்களோடு இயல்பாக பழகும் தன்மையையும், எங்கு சென்றாலும் கூட்டாக சென்று, கூடி வாழும் இயல்புகளையும் இன்றைய தலைமுறையினர் மறந்துகொண்டே இருக்கின்றார்கள்.
இன்றைய உலகம் ஒரு அறைக்குள்ளேயே முடிந்துவிடுகின்றது. மற்றவர்களோடு இயல்பாகப் பழகாமல் தொலைக்காட்சிப் பெட்டி, அலைபேசி என்று குறுகிய வட்டத்திற்குள் இன்றைய தலைமுறை முடங்கிக் கிடக்கிறது. இதனால் நன்மை எது, தீமை எது, பண்புடையோர் யார், யாருடன் பழகவேண்டும் என்பன போன்ற சிந்தனை இல்லாமல் போய்விடுகின்றது.
பண்புடையவர்களோடு பழகுவது என்பது ஒரு நல்ல புத்தகத்தைப்படித்தற்குச் சமம் என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க நாம் நமது குழந்தைகளை, அடுத்த தலைமுறையினரை பண்புடையவர்களாக வளர்க்க வேண்டும். பண்புடையவர்களோடு பழக விடவேண்டும். இதுதான் அடுத்த சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும், என பேசினார்.
இதனைத்தொடர;ந்து கவிஞர். நந்தலாலா தலைமையில் குப்பைகள் அதிகம் குவிந்து கிடப்பது மக்களின் அகத்திலா? புறத்திலா? என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.