Perambalur Book Fair; Citizens, youths and families should visit: Collector Karpagam invites!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பெரம்பலூர் 8 வது புத்தகத் திருவிழா இன்று தொடங்கி 03.04.2023 வரை பெரம்பலூர் நகராட்சி திடலில் கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, பொழுதுபோக்கு அம்சங்கள் என பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இன்று மாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைக்க உள்ளார்கள். இந்நிகழ்வில் பெரம்பலூர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு பாடநூல் கழகம், உழவர் நலன் வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறைச்சாலை கைதிகளுக்கு பயன்படும் வகையில் புத்தகம் வழங்க விரும்பும் நபர்கள் புத்தகங்களை வாங்கி பரிசளிக்க ஏதுவாக சிறைத்துறையின் சார்பில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நிகழ்வாக திரைப்பட இயக்குநர் .கரு.பழனியப்பன் “கற்கை நன்றே“ என்ற தலைப்பில் கருத்துரை வழங்க உள்ளார். அயலி என்ற இணைய தொடரில் சிறப்பாக நடித்துள்ள அபி நட்சத்திரா அவர்களுக்கு பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பாக “பெண்மையை போற்றுவோம்“ சிறப்பு விருது வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் நாளான 26.03.2023 அன்று பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா “புத்தகம் என்ன செய்யும்?” என்ற தலைப்பிலும், பாவலர் அறிவுமதி ”போர் என்ன செய்யும்” என்ற தலைப்பிலும், கவிஞர் ஆண்டன்பெனி ”இன்னொரு தாய்வீடு” என்ற தலைப்பிலும் கருத்துறை வழங்க உள்ளார்கள்.

மூன்றாம் நாளான 27.03.2023 அன்று சொல்வேந்தர் சுகி.சிவம் “உண்மையும் நன்மையும்” என்ற தலைப்பிலும், எழுத்தாளர் இமையம் ”இலக்கதியத்தை ஏன் படிக்க வேண்டும்?” என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் எம்.பி.நாதன் ”மனதில் நின்ற சொற்கள்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

நான்காம் நாளான 28.03.2023 அன்று பேராசிரியர் முனைவர் ஸ்டாலின் குணசேகரன் “இலக்கியத்தில் மனித நேம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்குகிறார். கவிஞர் நந்தலாலா குழுவினரின் “எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் பொங்குகிறதா?- மங்குகிறதா?” என்ற தலைப்பிலான பட்டிமன்றமும் நடைபெறவுள்ளளது.

ஐந்தாம் நாளான 29.03.2023 அன்று பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் “வாசிப்போம், நேசிப்போம்” என்ற தலைப்பிலும், மதுக்கூர் இராமலிங்கம் “புத்தகம் எனும் போதிமரம்” என்னும் தலைப்பிலும், எழுத்தாளர் சுளுந்தீ இரா.முத்துநாகு ”நானும் என் எழுத்தும்” என்னும் தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

ஆறாம் நாளான 30.03.2023 அன்று மருத்துவர் கு.சிவராமன் “உன் நலம், மண் நலம்“ என்னும் தலைப்பிலும், குரு ஞானாம்பிகை “கவிதை எனும் நீரோடை” என்னும் தலைப்பிலும், எழுத்தாளர் தங்கம் மூர்த்தி “நுாலகம் தொழுவது சாலவும் நன்று” என்னும் தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

ஏழாம் நாளான 31.03.2023 அன்று எழுத்தாளர் அகர முதல்வன் அவர்கள் “அறம் எனும் பொறுப்பு” எனும் தலைப்பில் கருத்துரை வழங்க உள்ளார். தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ் அவர்களின் அமுதத்தமிழ் ஆடரங்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

எட்டாம் நாளான 01.04.2023 அன்று முனைவர் கு.ஞானசம்மந்தம் “கல்வி அழகே அழகு” என்னும் தலைப்பிலும், எழுத்தாளர் பவா செல்லத்துரை “கதைகளால் துளிர்க்கும் மானுடம்” என்னும் தலைப்பிலும், பரமக்குடி செந்தில் ”நூலேணி” என்னும் தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

ஒன்பதாம் நாளான 02.04.2023 அன்று எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் “புத்தகமென்னும் திசைக்காட்டி” எனும் தலைப்பிலும், நகைச்சுவை நாவலர் செ.மோகனசுந்தரம் அவர்கள் “ஊக்கமது கைவிடேல்” எனும் தலைப்பிலும், பைந்தமிழ்ச்செல்வி புதுகை ச.பாரதி அவர்கள் ”எண்ணிய முடிதல் வேண்டும்” எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

நிறைவு நாளான 03.02.2023 அன்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் திரு.தரேஸ் அஹமது,இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம், தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கவிச்சுடர் கவிதைப்பித்தன் ”தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனும் தலைப்பிலும், கவிஞர், திரைப்பட நடிகர் திரு.ஜோ.மல்லூரி ”பாரதி ஏற்றிய பைந்தமிழ் நெருப்பு” எனும் தலைப்பிலும், முனைவர் பா.தாமோதரன் ”என் குறிப்பு” எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

இந்த பத்து நாள் நிகழ்ச்சிகளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள், ஈடன் கார்டன் கல்வி நிறுவனங்கள், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள், ஆதவ் பப்ளிக் பள்ளி, கோல்டன் கேட்ஸ் கல்வி நிறுவனங்கள், பிளஸ் மேக்ஸ் குழுமம் ஆகிய நிறுவனத்தினர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்கின்றார்கள்.

8வது முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் துவங்கப்படவுள்ள புத்தகத் திருவிழாவினை பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!