Perambalur Catholic Union condemns terrorist attacks Easter day on Sri Lanka
பெரம்பலூர் தூய பனிமயமாதா திருத்தல வளாகத்தில், கத்தோலிக்க சங்கத்தின் அவசரக் கூட்டம் பீட்டர்ராஜ் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் துணைத்தலைவர் மகிமைதாஸ், செயலாளர் அகரம் திரவியராஜ், பொருளாளர் ஜோசப், செயற்குழு உறுப்பினர்கள் இருதயசாமி, ரவிசித்தார்த்தன், பிளாட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பெருவிழாவின்போது, இலங்கையின் தலைநகர் கொழும்பு புனித அந்தோணியார் கிறிஸ்தவ தேவாலயம் உள்பட 8 இடங்களில் தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ஏறத்தாழ 300 பேரை பலி கொண்ட சம்பவம் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மனிதநேயத்துக்காக தனது இன்னுயிரைக் கொடுத்து மூன்றாம் நாளில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த விழா நடைபெற்ற இந்தவேளையில் இலங்கையில் மனித மாண்பை சிதைக்கும் வகையில் இந்த படுகொலை நடத்தப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கத்தோலிக்க சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கை அரசு இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நாசகார சக்திகளை இனம் கண்டு அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீவிரவாத வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் கிறிஸ்தவர்கள் குணமடைய பிரார்த்தனைசெய்யப்பட்டது. மறைமாவட்ட பொறுப்பாளர் சேவியர்துரை நன்றி கூறினார்.