Perambalur – Chettikulam Ekambareswarar and Thandayuthapani temples – Consultative meeting on Kumbabhishekam
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களின் குடமுழுக்கு விழா 25 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்ர்வரும் 30.08.2018 அன்று நடைபெற உள்ளது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர்ர் ஆ.அழகிரிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்கள் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நடைபெற உள்ள யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், திருக்கோயில் அருகில் தேவையற்ற வாகன நெரிசல்களை குறைக்கும் வகையில் திருக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தையும் மலையடிவாரத்தில் உள்ள தண்டபாணி நகரில் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இவ்விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி செட்டிக்குளம் மலையடிவாரத்தில் மருத்துவ முகாமும், அவசர உதவிக்காக 108 இலவச அவசர சிகிச்சை ஊர்தி ஒன்றும் தயார் நிலையில் சுகாதாரத் துறை வைத்திருக்கவேண்டும்.
குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள உள்ள பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறையின் மூலம் பெரம்பலூர், துறையூர் மற்றும் திருச்சி நகரங்களிலிருந்து அதிகப்படியான பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உள்ளாட்சித் துறையின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவைகளையும், மலை மற்றும் மலையை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். எனவே மேற்படி கும்பாபிஷேக விழாவை சிறப்புடனும், பாதுகாப்புடனும் நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ப.முருகைய்யா, செயல் அலுவலர் ம.யுவராஜ், தக்கார் கே.பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.