Perambalur CITU street vendors demonstration in the name of the threat of aggression

பெரம்பலூர் சாலையோர வியாபாரிகள் சிஐடியு சார்பில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.ரெங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வி.வரதராஜன், துணைச் செயலாளர் பி.குணசேகரன், துணைத் தலைவர் எம்.செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகாசாமி சிறப்புரையாற்றினர். தற்போது வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் அதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகளை காலி செய்யும் போக்கினை கைவிட வேண்டும், முறையாக கணக்கெடுத்து அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி வியாபாரக் குழுவிற்கான தேர்தல் நடத்த வேண்டும், விற்பனைக் குழுவிற்கான தேர்தல் நடைபெற்ற இடங்களில் விற்பனைக் குழு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையோர வியாபாரிகளிடம் மாமூல் வசூல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் தற்போது வழங்கும் கடன் 10 ஆயிரத்தை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் குரு ஹோட்டல் அருகில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அதே இடத்தில் இடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எ.கணேசன், பி.முத்துசாமி, பி.ரமேஷ் உள்பட சாலையோர வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!