Perambalur: Clash between DMK-AIADMK secretaries: AIADMK secretary dies in treatment; Police investigation!
பெரம்பலூர் அருகே செட்டிக்குளம் சாலையில் உள்ளது வேலூர் கிராமம், இந்த கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 7ம் தேதி, வேலூர் கிராமத்தில் நடைபெற்ற அன்னப் படையல் நிகழ்ச்சியின் போது,
திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் தரப்பினருக்கும்-அதிமுக கிளை செயலாளர் சுப்பிரமணி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சம்பவம் நிகழ்ந்தது.
இதில் ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் சார்பிலும், அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் 294(b), 323, 324, 147, 148, 307 IPC ஆகிய தலா 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தின் போது, படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் அதிமுக கிளை செயலாளர் சுப்ரமணி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதால், வேலூர் திமுக கிளை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திமுக கிளைச் செயலாளர் தரப்பினரும், அதிமுக கிளை செயலாளர் தரப்பினரும் மோதிக்கொண்ட வேலூர் கிராமம், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவின் சொந்த கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மோதிக் கொண்ட இருகட்சியினரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.