Perambalur Co-Op tex Diwali Special Sale; Collector Karpagam started!
பெரம்பலூர் மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள். கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, துண்டு இரகங்கள், பருத்தியால் நெய்யப்பட்ட சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் என பல்வேறு விதமான துணிகள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2022ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையின்போது, ரூ.25 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 2023ஆம் ஆண்டிற்கான தீபாவளி விற்பனை இலக்காக ரூ.55 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்குகிறது.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அவர்களின் உழைப்புக்கு உரிய மரியாதையினை செலுத்திடும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் துணிகளை வாங்கி அவர்களுக்கு உதவிட வேண்டும். அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அதிக அளவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் துணி ரகங்களை வாங்கும்போது, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெருகும். எனவே, அனைவரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீத சலுகையுடன் துணிகளை வாங்கிப் பயன்பெற வேண்டும், என்ற நோக்கில் கோ-ஆப் டெக்ஸ் செயல்படுகிறது.
இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மண்டல மேலாளர் ப.அம்சவேணி, மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், விற்பனை நிலைய மேலாளர் ரேகா, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம் https://dsmatrimony.net/