Perambalur Collector information for public to update Aadhaar details past 10 years!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


இந்திய தனித்துவ அடையாள ஆணையம், (UIDAI) நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது நாட்டு மக்கள் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள் பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான மத்திய அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் தாங்கள் ஆதார் எண் பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தால், தற்போதைய புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும் (Proof of Identity-POI), தற்போதைய முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் (Proof of Address – POA) சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஆதார் தரவுகளை புதுப்பித்திடுவதன் வாயிலாக மத்திய சேமிப்பகத்தில் ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக பதிவில் இருப்பதை உறுதி செய்ய முடியும். பொது மக்கள் தங்கள் அடையாளம் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட ஆதார் விபரங்களை புதுப்பித்து வைத்துக் கொள்ளுவதால் அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் மற்றும் சேவைகளையும் எவ்வித சிரமமும் இன்றி உடனடியாக பெற்று பயன் பெறலாம்.

ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த பொது மக்கள் தங்கள் அடையாளம் புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்ட ஆதார் விபரங்களை புதுப்பித்து கொள்ள ஏதுவாக ”மை ஆதார்” (My Aadhaar) இணையதளத்திலும், செயலியிலும் “அப்டேட் டாக்குமெண்ட்” என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம், (UIDAI) சேர்த்துள்ளது. பொது மக்கள் நேரடியாக இத்தளத்திற்குள் சென்று தங்களுடைய விபரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் ஆதார் விபரங்களை புதுப்பிக்க கோரி தொலைபேசி வாயிலாக வரும் எந்தவித அழைப்புகளுக்கும்/குறுஞ்செய்திகளுக்கும் பொதுமக்கள் எவரும் பதிலளித்து தங்கள் ஆதார் விபரங்களை தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!