Perambalur Collector informed about the work survey to take into account the crop damage caused by monsoon

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கலம் கிராமத்தில் பருவமழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து கலெக்டர் வெங்டபிரியா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பருத்தி, மக்காச்சோளம், நெல் போன்ற பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. தமிழக அரசின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிய வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக பயிரிடப்பட்ட பயிர்கள் விவரம், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் விவரம், காப்பீடு செய்யப்பட்ட பயிர்களின் விவரம், பாதிப்பின் தன்மை, இழப்பீடு குறித்த விவரம் மற்றும் அது குறித்து விவசாயிகளின் அடங்கல் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்ட விவரம் போன்றவற்றை சேகரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இப்பணியினை வருவாய்துறை, வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை, மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் வெங்கலம் கிராமத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் வருவாய்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதையும் ஆய்வு செய்து விரைவான அறிக்கையினை தயார் செய்து தமிழக அரசுக்கு விரைந்து அனுப்பி வைக்க சம்மந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அப்போது தெரிவித்தார்.

பின்னர் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.

இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) கருணாநிதி, வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட வருவாய்துறை அலுவலர்கள், வெங்கலம் ஊராட்சித் தலைவர் ராஜ்பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!