Perambalur: Collector inspects the activities of joint water project in Ayyanperaiyur, Ranjankudi villages!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அயன்பேரையூர் மற்றும் ரஞ்சன்குடி ஆகிய கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கற்பகம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு அமைக்கபட்டுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளை பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பராமரிப்பிலுள்ள 306 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சார்ந்த 15 கடைகோடி கிராமங்களான அயன்பேரையூர், தேவையூர். எறையூர், வி.களத்தூர், திருவாளந்துரை மற்றும் அகரம் ஊராட்சிகளுக்கு வெள்ளாற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளை சேர்ந்த 15 குடியிருப்புகளில் தற்போதைய மக்கள் தொகை 2022 ஆம் ஆண்டு 28921, இடைக்கால மக்கள் தொகை 2037ஆம் ஆண்டு 33149 மற்றும் உச்சக்கட்ட மக்கள் தொகை 2052 ஆம் ஆண்டு 37312 எனவும், இத்திட்டத்தில் 15 கிராமங்களுக்கான தினசரி குடிநீர் தேவை முறையே 1.41 மில்லியன் லிட்டர். 1.61 மில்லியன் லிட்டர் மற்றும் 1.81 மில்லியன் லிட்டர் என கணக்கிட்டு குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இத்திட்டத்திற்காக அயன்பேரையூர் அருகில் வெள்ளாற்றில் மூன்று நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு, வெள்ளாற்றின் தென்கரை அருகில் அமைக்கப்படவுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்திலிருந்து 15.97 கி.மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்படவுள்ள 250 மில்லி மீட்டர் விட்டமுள்ள நெகிழ் இரும்பு குழாய் முதல் 90 மில்லி மீட்டர் விட்டமுள்ள உயர் அழுத்த நெகிழி குழாய்கள், நீர் உந்தும் குழாய்கள் 14.66 கி.மீ நீளமும் அமைத்து, தற்பொழுது உள்ள 4 தரைமட்ட தொட்டிகள், கூடுதலாக கட்டப்பட்டுள்ள 5 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள 33 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட ஒரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் நீர் ஏற்றப்பட்டு, ஏற்கனவே உள்ள பகிர்மான குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்பொழுது முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் உள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டுமென்று உரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஊராட்சி மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!