Perambalur: Collector Karpagam orders to recover encroached lands around Chettikulam Hill

”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் ஊராட்சியில் கலெக்டர் க.கற்பகம், அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை செட்டிகுளம் குன்று பகுதியில் அரசின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு, குன்றின் அடிவாரத்தில் அரசின் நிலம் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த கலெக்டர், நில வரைபடத்தை வைத்து அரசின் நிலத்தை உடனியாக மீட்டெடுக்க வேண்டும் என வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மீட்டெடுக்கும் நிலத்தில் மக்கள் பயன்படும் வகையில் குளம் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து செட்டிகுளம் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதி மற்றும் அரசினர் மாணவியர் விடுதிகளை பார்வையிட்ட கலெக்டர், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார்.

விடுதியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்ட அவர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப்பொருட்கள் தேவையான அளவு உள்ளதா என்றும், வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றும் அதற்கான பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர் ”அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். படிப்பு ஒன்றுதான் நம்மை இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உயர்த்தும். நீங்கள் என்னவாக நினைக்கின்றீர்களோ அந்த இலக்கை நோக்கி விடா முயற்சியுடன் படியுங்கள். நானும் உங்களைப்போல அரசுப்பள்ளியில் படித்துததான் இன்று ஆட்சியராகி உள்ளேன். உங்கள் இலட்சியத்தை அடைய கல்வி ஒன்றுதான் உதவும். எனவே, அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். உங்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்கின்றது. அதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றார்..

அதனைத்தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!