Perambalur Collector ordered to take war-time action against those encroaching on water bodies!

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் அமைத்தல், குளங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெகக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அம்மாபாளையம் ஊராட்சியில் மேலதாமரைக்குட்டை என்ற இடத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்திலும், களரம்பட்டி ஊராட்சியில் தாமரைக்குளம் பகுதியிலும் புதிய குளம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இந்த இரண்டு இடங்களிலும், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் அம்மாபாளையம் மேலதாமரைக்குட்டை பகுதியில் சுமார் 6 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலையில் அதில் சுமார் 30 செண்ட் அளவிலான இடத்தில் குளம் அமைக்கப்பட்டு வருவது ஏன் என வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேள்வி எழுப்பிய கலெக்டர், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறையாக முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் இப்பகுதியில் உள்ள சுமார் 6 ஏக்கர் அரசு நிலம் மீட்டெடுக்கப்பட்டு குளம் புதிய குளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், மாவட்டம் முழுவதிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, அரசின் நிலம் கையகப்படுத்தப்பட்டு நீர்நிலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசுக்குச் சொந்தமான இடங்களில், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த பகுதியின் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், கிராம ஊராட்சிகளில் புதிய குளங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள குளங்களை முழுமையாக புனரமைப்பதற்கும் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் ரூ.5 கோடியே 20 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் 27 புதிய குளங்கள் அமைக்கவும், 7 குளங்களை புனரமைப்பதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் பெரம்பலூர் ஊராட்சியில் கல்பாடி ஊராட்சியில் அப்பூரான் கோவில் குளம் அருகில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைத்தல், அம்மா பாளையம் ஊராட்சியில் மேல தாமரைக்குட்டை அருகில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைத்தல், மேலப்புலியூர் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைத்தல், செங்குணம் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைத்தல், செங்குணம் பாலம்பாடி பகுதியில் ரூ.43.25லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைத்தல், எசனை பூந்தோப்புக்குளம் அருகில் ரூ.50.77 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5 பணிகள் முடிவுற்றுள்ளது.

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாரணமங்கலம் ஊராட்சியில் மருதடி ஈச்சங்காடு அருகில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைத்தல், நாட்டார்மங்கலம், தெரணி, காரை(கி), எலந்தலப்பட்டி, இரூர், கூடலுார் மற்றும் கொட்டரை ஆகிய பகுதிகளில் 10 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 6 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பசும்பலூர், தொண்டமாந்துரை(கி), வாலிகண்டபுரம், பெரியம்மாபாளையம், தேவையூர் மற்றும் அனுக்கூர் ஆகிய பகுதிகளில் ரூ.88.52 லட்சம் மதிப்பில் 5 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2 பணிகள் முடிவுற்று, 3 பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், பசும்பலூர்(தெ), பிரம்மதேசம், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை (தெ) ஆகிய பகுதிகளில் ஏற்கனவே உள்ள குளங்கள் ரூ.1.04கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு குளத்திற்கான நீர்வழித்தடங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றது.

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், சிறுமத்தூர், பேரள(வ), பேரளி(தெ), பரவாய்(மே), ஓலைப்பாடி (கி) ஆகிய பகுதிகளில் ரூ.1.75கோடி மதிப்பில் 5 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், பெரியம்மாபாளையம், பரவாய் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் ரூ.90,000 மதிப்பில் 3 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

ஆக மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.5.71 கோடி மதிப்பில் 27 புதிய குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது, 7 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் புதிய குளங்கள் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகின்றது. அரசுக்கு சொந்தமான இடங்களில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அவற்றை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. பொதுமக்களும் தங்கள் பகுதியில் அமைக்கப்படும் குளங்களை நல்ல முறையில் பாதுகாத்து, குப்பைகளை கொட்டாமல் துாய்மையாக பராமரிக்க வேண்டும், என தெரிவித்தார்.

அப்போது, அரசு பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிச்சைப்பிள்ளை(அம்மாபாளையம்), சுதாகர்(களரம்பட்டி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!