Perambalur Collector orders to remove shops within 100 meters from Farmers Market!
பெரம்பலுார் நகராட்சிக்கு உட்பட்ட வடக்குமாதவி சாலையில் உள்ள உழவர் சந்தையில் கலெக்டர் க.கற்பகம் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.
தக்காளி விலை ஏற்றம் கண்டுள்ளதால், தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் உழவர் சந்தையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதை பார்வையிட்ட அவர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பின்னர் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடைகளை பார்வையிட்ட அவர், உழவர் சந்தையை ஒட்டிய வெளிப்பகுதியில் சிலர் கடைகள் வைத்துள்ளதால் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கபப்டுவதாகவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் உழவர் சந்தையின் உள்ளேயும், வெளியேயும் கடைகள் வைத்துள்ளதாகவும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உழவர் சந்தையில் கடைகள் வைத்துள்ளவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, உழவர் சந்தையின் வெளிபகுதியில் அமைந்துள்ள கடைகளை பார்வையிட்ட கலெக்டர் கற்பகம், உழவர் சந்தையின் அமைவிடத்தில் இருந்து 100 மீட்டருக்கு பிற கடைகள் இருக்க கூடாது என்ற விதி உள்ளதால், அதைப் பின்பற்றி பிற கடைகளை அகற்ற நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. அதன் ஒரு பகுதியாக உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் கிலோ ரூ.100க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு நாளைக்கு சுமார் 200 கிலோவிற்கும் மேல் விற்பனை நடைபெறுகின்றது. இது பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில் விரைவில் வெங்காயம் அறுவடைசெய்யும் காலம் வர உள்ளதால், வெங்காயம் வரத்து ஒரு வார காலத்திற்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என தெரிவித்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை இணை இயக்குநர்(பொ) கீதா, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் சரண்யா, நகராட்சி ஆணையர் (பொ) ராதா, பெரம்பலுார் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.