Perambalur Collector orders to survey information about government schools without enough classrooms and laboratories and take appropriate action!

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் கற்பகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவர்களை தேர்விற்கு தயார் செய்யும் முறை குறித்தும், பாடம் நடத்தும் முறை குறித்தும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். மேலும் வகுப்பறைகளுக்குச் சென்ற கலெக்டர் மாணவ மாணவிகளிடம் அப்போது நடத்தப்பட்டு கொண்டிருந்த பாடங்கள் தொடர்பான கேள்விகளை கேட்டார். கேள்விகளுக்கு சரியான விடையளித்த மாணவர்களை பாராட்டினார்.

அப்பள்ளியில் ஆய்வகங்களும், வகுப்பறைகளும் பற்றாக்குறையாக இருப்பதை அறிந்த கலெக்டர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, போதிய வகுப்பறைகள் இல்லாத பள்ளிகள், ஆய்வகங்கள் இல்லாத பள்ளிகள், புனரமைப்பு தேவைப்படும் பள்ளிகளின் தகவல்களை சேகரித்து அறிக்கையாக வழங்கிட வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். அவ்வாறு வழங்கப்படும் பள்ளிகளுக்கு போதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், பள்ளியின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த “மாணவர் மனசு” பெட்டியினை பார்வையிட்ட கலெக்டர், மாணவ மாணவிகள் இந்த பள்ளி குறித்த எண்ணங்கள், பாடம் நடத்தும் ஆசிரியர்கள் குறித்த நல்ல தகவல்கள், தங்களுக்கு தனிப்பட்ட முறையில் உள்ள இடர்பாடுகள் குறித்த செய்திகள், வெளிப்படையாக சொல்ல இயலாமல் கடிதம் வாயிலாக சொல்ல நினைக்கும் செய்திகள் என அவர்கள் சொல்ல நினைப்பதை கடிதம் வாயிலாக ஆசிரியர்களிடம் தெரிவிக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு என்ற பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியில் போடப்படும் ஒவ்வொரு கடிதத்திற்கும் தலைமையாசிரியர்கள் முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினந்தோறும் இந்த பெட்டியினை திறந்து அதில் மாணவச் செல்வங்களின் கடிதங்கள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி துவங்கிடவும், கீழக்கணவாயில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொழில்நுட்ப மாணவர் விடுதி தொடங்கிடவும் அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, அப்பகுதிகயில் விடுதிகளுக்கான சொந்த கட்டடங்கள் கட்டப்படும் வரை தகுதியான தனியார் கட்டடங்கள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

மேற்சொன்ன இரண்டு விடுதிகளிலும் தலா 100 மாணவர்கள் தங்கிப் பயில்வதற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செங்குணம் விடுதிக்கு 1 காவலர் மற்றும் ஒரு ஏவலர் பணியிடங்கள் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. கீழக்கணவாய் மிகப்பிற்படுத்தப்பட்டோர் தொழில்நுட்ப மாணவர் விடுதிக்கு ஒரு சமையலர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, இன்வெர்ட்டர், தட்டு மற்றும் டம்ளர், ஜமக்காளம், பெட்ஷீட், தலையணை, செம்மொழி நூலகம், புத்தகங்கள், போர்வை போன்றவை அரசின் சார்பில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடுதிக்கான தற்காலிக தனியார் கட்டடங்களை பார்வையிட்ட அவர் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்து, கட்டடம் தரமானதாக உள்ளதா என பொதுப்பணித்துறையின் சான்று பெற வேண்டும் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.

பின்னர், கீழக்கணவாயில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிக்குச் சென்று பார்வையிட்ட அவர், அங்கு மாணவிகளுக்கு சமைக்கப்பட்டிருந்த உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் விடுதி மாணவிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும், விடுதியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்றும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

சி.இ.ஓ அறிவழகன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. சிவசங்கர், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!