Perambalur Collector presided over the health board meeting!
பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையின், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரப்பேரவைக் கூட்டம் கலெக்டர் கற்பகம், தலைமையில், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு உருவாக வாய்ப்புள்ள வழிகள் குறித்தும், அவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தேவைப்படும் வசதிகள் குறித்தும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் கட்டடங்கள் ஏதும் உள்ளதா, என்னென்ன கருவிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்தும் ஒவ்வொரு சுகாதார நிலையம் வாரியாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், மழைக்காலம் என்பதால் பொதுமக்களுக்கு டெங்கு கொசுப்புழுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
குழந்தைகள் மையத்தில் பயிலும் குழந்தைகளில் வயதுக்கேற்ற வளர்ச்சி மற்றும் எடை குறைபாடுகளுடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறையாக வழங்கப்படுவதை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நிலை குறித்து முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்பதையும், அந்த அரிசியில் உள்ள நன்மைகள் குறித்தும் மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.