Perambalur collector who issued ration card, insurance card to a patient who had wandered for 5 years in 1 hour!
இருதய நோயாளி ஒருவரின் 5 வருட கோரிக்கை ஒரு மணி நேரத்தில் நிறைவேறியது -இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்த இளைஞருக்கு மனு கொடுத்த 1 மணி நேரத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ,ப., அவர்களுக்கு பயனாளி கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சார்ந்த அருண் சற்குணம்(43) என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகின்றார். இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனை சிகிச்சைக்காக சென்ற போது, மருத்துவர்கள் அதிகம் செலவாகும் என தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற, மருத்துவ காப்பீடு அட்டை விண்ணப்பிக்க சென்ற போது அவரிடம் குடும்ப அடையாள அட்டை இல்லை. இதனால் பல நாட்களாக சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தார்.
மேலும், கடந்த 5 வருடங்களாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவர் திருப்பூர் பகுதியில் பணிபுரிந்து வருவாதால் திருமாந்துறையில் உள்ள அவரது வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற அலுவலர்கள் வீட்டில் ஆள் இல்லை என்பதற்காக அவரது மனுவினை நிராகரித்துள்ளனர்.
இந்நிலையில், குடும்ப அட்டை கோரியும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை கோரியும் தான் கொண்டு வந்த கோரிக்கை மனுவோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அலுவலகம் வந்த கலெக்டர் கற்பகம், அருண் சற்குணத்திடம் என்ன கோரிக்கை என கேட்டறிந்தார்.
அருண் சற்குணத்தின் நிலையினை உணர்ந்த, கலெக்டர் உடனடியாக அவருக்கு குடும்ப அட்டையும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்க உத்தரவிட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அருண் சற்குணத்திற்கு வழங்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத அருண் சற்குணம் கண்ணீர் மல்க கலெக்டரிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார். 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றேன், எனது கோரிக்கைக்கு ஒரு மணி நேரத்தில் தீர்வு கண்டு, எனக்கு மறு வாழ்வு அளித்துள்ளீர்கள், என் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அப்போது, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே எங்கள் பணி. நியாயமான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித்தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால், செய்து தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என கூறி வழியனுப்பி வைத்தார்.