பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.25 லட்சத்து 48 ஆயிரத்து 350 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளில் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை பறக்கும் படையினர் மூலம் ரூ.14 லட்சத்து 91, ஆயிரத்து 030ம், தீவிர கண்காணிப்புக்குழுவின் மூலம் ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500ம் ஆகமொத்தம் ரூ.17,5,530 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேபோல குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை பறக்கும் படையினர் மூலம் ரூ.6,லட்சமும், தீவிர கண்காணிப்புக்குழுவின் மூலம் ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 820 ஆகமொத்தம் ரூ.7 லட்சத்து 94 ஆயிரத்து 820 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் சம்மந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில் இதுவரை 18 லட்சத்து 86 ஆயிரத்து 420 மதிப்பிலான பணமும், 1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூட்டைகளும் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதி மீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. இதில் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.
விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கி வருகின்றது.
இந்தக்கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.