Perambalur: Collector’s order to carry out cleaning work in the municipality, Town Panchayats and Village panchayats!

பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில், நடந்தது

இக்கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் விபரம் குறித்து ஒவ்வொரு ஊராட்சி வாரியாக ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாவது:

கோடை காலம் வர உள்ளதால் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் எந்த இடர்பாடும் இருக்கக் கூடாது. எந்தெந்த பகுதிகளில் குடிநீர் தேவையை விட குறைவாக வழங்கப்படுகின்றது என்பது குறித்த அறிக்கையினை ஒவ்வொரு அலுவலரும் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு குடிநீர் வழங்க இயலும் என்ற அறிக்கையையும், ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் அன்றாடம் எவ்வளவு குடிநீர் தேவைப்படுகின்றது என்ற தகவலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் அளவை விட கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் பகுதிகளில் கிணறுகள் ஏதும் பயன்பாடற்ற நிலையில் உள்ளதா என்பதை அலுவலர்கள் பார்வையிட்டு, அந்த கிணறுகளை முறையாக சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலுமா என்பதை ஆய்வு செய்திட வேண்டும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் கிணறுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் ஊரகப்பகுதிளில் பல்வேறு இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்டி முடித்தும் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் பயன்பாட்டில் இல்லாத நிலை உள்ளது. ஊராட்சி ஒன்றியம் வாரியாக பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்களை 1 வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் இல்லாத சுகாதார வளாகங்களுக்கு அருகில் தண்ணீர்வசதி உள்ள இடத்தில் இருந்து குழாய் மூலமாக தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்திட வேண்டும். மின்சார வசதி இல்லாத சுகாதார வளாகங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

நீர்நிலைகளில் கழிவு நீர் கலக்காத வகையில் முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுப்புறங்களுக்கு கேடுவிளைவிப்பதோடு, மனிதர்களுக்கும் கேடாக அமைகின்றது. இந்த நிலை முற்றிலும் மாற்றப்பட வேண்டும்.

09.03.2024 அன்று நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகிளல் ஆய்வின்போது, கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமல் தண்ணீர் தேங்கியிருக்கும் சூழல் காணப்பட்டால் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும், என தெரிவித்தார். இக்கூட்டத்தில் அனைத்து ஊரக வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!