பெரம்பலூர் மாவட்டம் தொண்டைமாந்துறை அருகே கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீஸார் இன்று எடுத்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு, விவசாயி அவரது இளையமகள் கனிமொழி(18), இவர் திருச்சி சமயபுரம் அருகே உள்ள டி.ஆர்.பி (எஸ்.ஆர்.எம்) பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கனிமொழியை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த அதே ஊரைச்சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் (26) என்பவர் கடந்த 14ந்தேதி மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய கனிமொழியை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து டூவீலரில் அவர் குத்தகைக்கு விவசாயம் பார்த்து வரும் விவசாய நிலம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டாமாந்துறை அருகே உள்ள விஜயபுரம் கிராமத்திலுள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு கனிமொழியை கொடூரமாக அடித்து கொலை செய்து விட்டதாக செல்போன் மூலம் தகவல் அளித்து விட்டு தப்பியோடி தலைமறைவானார்.
இதுகுறித்து கனிமொழியின் தந்தை அய்யாவு அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடி தலைமறைவான பிரகாஷை இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பிரகாஷ் கடந்த 17ந்தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதிமகாலட்சுமி உத்தரவின் பேரில் 15நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்ட பிரகாஷை 3 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டுமென அரும்பாவூர் போலீசார் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் இன்று காலை மனு அளித்தனர்.
பிற்பகலில் மனுவை விசாரித்து நீதிபதி நஷீமாபானு பிரகாஷிற்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் பிரகாஷை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.