Perambalur: Cool rain for scorching summer!
பெரம்பலூர்: கொளுத்தும் கோடைக்கு இதமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
அக்னியின் கத்திரி வெயிலின் தாக்கம் மறைந்து குளு குளுவென சீதோசன நிலை மாறி உள்ளது.
குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வறுத்தெடுத்த நிலையில் சில மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரைமணி நேரமாக கன மழை கொட்டியது. அபிராமம், பேரையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் மறைந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.
சென்னையில் நேற்று காலையில் சாரல் மழை பெய்த நிலையில் பிற்பகலில் மிதமான வெயிலோடு குளிர் காற்று வீசியது.
இன்று காலை முதலே வெயில் அடித்த நிலையில் திடீரென கனமழை கொட்டியது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது.
திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும் கோடை வெயிலுக்கு பெய்த மழை இதமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
பால் உற்பத்தி மேலும் அதிகரிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கோடை பெய்து வருவதால் திருவிழா கோலம் பூண்டுள்ள பல்வேறு கிராமங்களில் தேர்த் திருவிழா கோடை வெயில்யின்றி அருமையாக நடைபெற்று வருகிறது.
வீட்டிற்கு வந்த உறவினர்கள் வியர்வை, வெப்பத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பினர். கோடை வாசஸ்தலங்கள் போன்று பகலில் சூரியன் வெளிச்சம் குறைந்து மழைக் காலம் போல் காட்சியளிக்கிறது.
தற்போது பெய்து வரும் கோடை மழையால் தரிசு, மேய்ச்சல் நிலங்களில் தீவன புற்களும் அதிக அளவில் புதியாக முளைத்து இருப்பதால் கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் வாங்கும் செலவு குறைந்து பசும் தீவனத்தால் பால் மேலும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
இதனால் கால்நடை வளர்ப்போர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.