cultural-danceஇது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் சார்பில் நடத்தப்படும், பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி, வெங்கடேசபுரம், பெரம்பலூர் என்ற முகவரியில் 29.01.2016 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

5-8 வயது ,9-12 வயது, 13-16 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் மாணவ மாணவியருக்கு குரலிசை (வாய்ப்பாட்டு), நடனம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய நான்கு கலைகளில் போட்டிகள் நடைபெறும்.

குரலிசைப்போட்டியில் கர்நாடகஇசை, தேசியப்பாடல்கள்,சமூக விழிப்புணர்ச்சிப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே பாடப்படவேண்டும். திரைப்படப்பாடல்கள் அனுமதிக்கப்படமாட்டாது. கிராமிய நடனப்போட்டியில் தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக்கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து திரைப்பட நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. நடனம் ஆடும் பாடலை மட்டும் குறுந்தகட்டில் பதிவு செய்து போட்டியாளர்கள் கொண்டுவருதல் வேண்டும்.

நடனப்போட்டியில் பரதநாட்டியம், குச்சுப்புடி,மோகினி ஆட்டம் ஆகிய நடனங்களில் கலந்து கொள்ளலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். மேற்கிந்திய நடனம் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை.நடனம் ஆடும் பாடலை மட்டும் குறுந்தகட்டில் பதிவு செய்து போட்டியாளர்கள் கொண்டுவருதல் வேண்டும். ஓவியப் போட்டிக்குத் தேவையானப் பொருட்களை அவரவர் கொண்டு வர வேண்டும். 40×30 செ.மீ. அளவுள்ள ஓவியத்தாள்களையே பயன்படுத்த வேண்டும். போட்டிகளில் குழுவாகக் கலந்து கொள்ளக் கூடாது.

மேலும் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது பிறப்புச்சான்று நகல் அல்லது தாங்கள் பயிலும் பள்ளியிலிருந்து சான்றிதழ் ((bonafide Certificte) கொண்டுவருதல் வேண்டும். போட்டி நடைபெறும் 29.01.2016 அன்று காலை 9.30 மணி முதல் மாணவ, மாணவியர் பெயர்களை பதிவு செய்துகொள்ளவேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 9-12, 13-16 வயதுப்பிரிவில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே ஆர்வமும், திறமையுமுள்ள மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம், என அவரது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!