பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, பேரளி, ரஞ்சன்குடி கோட்டை, வேப்பந்தட்டை, பாடாலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் அரசுக்கு சொந்தமான வனத்துறை வனக்காப்பு காடுகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வனத்திலுள்ள மான்கள் தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் வருவதும், பின்னர், நாய் துரத்துவதும், கிணறுகளில் தவறி விழுந்து உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 5க்கும் மேற்ப்பட்ட புள்ளி மான்கள் இன்று காலை தண்ணீர் தேடி பெரம்பலூர் அருகே துறைமங்களம் மூன்று ரோடு பகுதியில் வந்த போது மான்களை பார்த்த நாய்கள் சில அவற்றை துரத்தியது.
இதனால் மிரண்டு போய் பதட்டமடைந்த மான்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய போது மூன்று ரோடு பகுதியில் தரையிலிருந்து 25 அடி உயரமுள்ள மேம்பாலத்திலிருந்து ஆண் புள்ளி மான் ஒன்று கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
மற்ற மான்கள் துறைமங்கலம் ஏரி பகுதியிலுள்ள முட்புதருக்குள் ஓடிமாயமானது. இதனிடையே மேம்பாலத்திலிருந்து மான் தவறி விழுந்துஉயிரிழந்த சம்பவம் அறிந்து அப்பகுதியில் ஏராளமான சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பொது மக்கள் பலர் திரண்டனர்.
இதனால் பரபரப்புஏற்பட்டது. மான் உயிரிழந்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் கால தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.